“ஆவணப்படம் அவமானமல்ல; அதன் மீதான தடையே அவமானம்”

இந்தியத் தலைநகர் டில்லியில் கூட்டு பாலியல் வல்லுறவுக்குள்ளாகி கொலைசெய்யப்பட்ட பெண் தொடர்பான பிபிசியின் ஆவணப்படம் இந்தியாவில் எங்கும் ஒளிபரப்பக்கூடாது என்று தடை விதித்த இந்திய அரசு, அந்த காணொளியை யூடியூபிலும் நீக்கும் முயற்சிகளை முன்னெடுத்ததாகவும், அதன் விலைவாக அந்த காணொளி யூடியூபில் இருந்து நீக்கப்ப்படுவிட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

leena_manimegalai

இந்த ஆவணப்படத்துக்கு எதிரான இந்திய அரசின் இந்த தடை முயற்சிகள் இந்திய அளவிலும் சர்வதேச அளவிலும் பெரும் சர்ச்சையை தோற்றுவித்திருக்கிறது. இந்த ஆவணப்படத்தை இந்திய அரசு தடை செய்ததை எதிர்த்தும் ஆதரித்தும் பல்வேறு மட்டங்களில் கருத்துக்கள் வெளியாகி வருகின்றன.

இந்தியாவுக்குள் இந்த ஆவணப்படம் தடுக்கப்படுவதற்கு முன்பாக இந்த ஆவணப்படத்தை இணையத்தில் பார்த்த இந்தியாவின் ஆவணப்பட தயாரிப்பாளர், இயக்குநர் மற்றும் பெண்ணியவாதியான லீனா மணிமேகலை, பிபிசியின் இந்த ஆவணப்படத்தைவிட, இந்திய அரசு அதை தடுத்திருக்கும் செயலே இந்தியர்களுக்கு பெரிய தலைக்குனிவைத் தேடித்தந்ததாக பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

அதேசமயம், இந்த குறிப்பிட்ட ஆவணப்படத்தின் மீது தமக்கு பல்வேறுவகையான விமர்சனங்கள் இருப்பதாக தெரிவித்த லீனா மணிமேகலை, இந்த ஆவணப்படம் செய்திகளை மீண்டும் தொகுத்துத் தந்திருக்கிற ஒரு செய்தித்தொகுப்பாக மட்டுமே இருப்பதாக தெரிவித்தார். இந்தியாவின் பாலியல் வல்லுறவு பிரச்சனையின் பன்முக காரணிகளை இந்த ஆவணப்படம் பேசத்தவறிவிட்டதாகவும் அவர் கூறினார்.

தனது பார்வையில் இந்த ஆவணப்படம் இந்தியாவின் பாலியல் பலாத்கார பிரச்சனையை வெறும் தட்டையான ஒற்றைப்பார்வையில் பார்ப்பதாக விமர்சித்த லீனா மணிமேகலை, அதே சமயம் அதை தடை செய்ததன் மூலம் இந்திய அரசு ஒட்டுமொத்த இந்தியர்களையும் அவமானப் படுத்திவிட்டதாகவும் தெரிவித்தார்.

Related Posts