ஆளும்தரப்பும், அரசியல் தலைவர்களும் செந்தூரனின் உயிருக்குப் பதில் சொல்ல வேண்டும்! பொ.ஐங்கரநேசன்

தொடர் ஏமாற்றங்களும், விரக்;திகளும் வஞ்சிப்புகளும் எஞ்சியிருக்கும் எமது இளைய தலைமுறையை மீண்டும் வன்முறைப் பாதையை நோக்கி உந்துகிறது என்பதைச் சகல தரப்புகளும் புரிந்து கொள்ள வேண்டும் என்று வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.

செந்தூரனின் உயிரிழப்பு தொடர்பாக அவர்விடுத்திருக்கும் அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கையில்,

வலிகளோடும் துயர்களோடும் வாழ்ந்து வருகின்ற தமிழினம், தன் விடுதலைக்காகப் போராடி உயிர் நீத்த உத்தமர்களின் நினைவுகளை நெஞ்சில் ஏந்தும் மாவீரர் வாரத்தில்,

நெஞ்சைப் பதறவைக்கும் விதமாகக் கொக்குவில் இந்துக்கல்லூரி மாணவன் இராஜேஸ்வரன் செந்தூரனின் அகால மரணம் அமைந்துள்ளது.

இனவிடுதலைப் போராட்டத்துக்கெனப் புறப்பட்ட நாற்பதாயிரத்துக்கும் மேற்பட்ட உயிர்களைத் தியாகம் செய்திருக்கிறோம்.

வாழவேண்டிய வயதில் இலட்சிய நோக்கத்துக்காக போராடப் புறப்பட்ட அந்தத் தியாகிகளின் கனவுகள் இடைநடுவே அறுந்துபோயின. அந்தத் துயரங்களின் தொடர்கதையாகவே இன்று செந்தூரனும் தன் உயிரை மாய்த்துக்கொண்டுள்ளான்.

பல ஆண்டுகளாக அரசியல் காரணங்களுக்காகச் சிறைகளில் வாடுகின்ற தமிழ் உறவுகளை விடுதலை செய்யவேண்டும் என வலியுறுத்திப் பள்ளிச் சீருடையினுடனேயே தொடருந்தின் முன்னால் பாய்ந்து செந்தூரன் தன் உயிரைத் தியாகம் செய்துகொண்டுள்ளான்.

சிறைக்கதவுகளைத் திறந்துவிடாமல் மூடிவைத்திருக்கும் அரசியல்வாதிகளின் மனக்கதவுகளைத்தன் மரணத்தின் மூலம்தட்டித் திறக்க முடியும் என்று நம்பியே செந்தூரன் இந்த முடிவுக்கு வந்திருக்க வேண்டும்.

ஆனால், அவனுடைய சாவு ஒரு பொது இலட்சியத்துக்கான தியாகச் சாவாக இருந்தாலும் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது. எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது.

செந்தூரன்தன் உயிரை மாய்த்துக்கொண்டதற்குத் தெரிவித்திருக்கும் காரணங்களை எவராலும் நிராகரிக்க முடியாது. செந்தூரனுடைய கோரிக்கைகள் நியாயமானவை.

சிறையில் வாடும் எமது உறவுகளுக்கு யாரெல்லாம் நீதி பெற்றுத் தருவார்கள் என்று எமது மக்கள் எதிர்பார்த்திருந்தார்களோ அவர்கள் எல்லாம் கைவிட்ட நிலையிலேயே செந்தூரன் இவ்வாறான முடிவை எடுத்திருக்கிறான்.

எங்களுடைய இளைய தலைமுறையினரில் சிலர் ஒழுக்க விழுமியங்களைக் கடந்து முறைதவறி வேறொரு திசையில் பயணிக்கும் சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன.

ஆனாலும், செந்தூரனின் தியாகச் சாவின் மூலம் எமது இனத்தின் மீது இழைக்கப்பட்ட அநீதிக்கெதிராகக் கிளர்ந்தெழக்கூடிய மனநிலையில் இளைய சமூகம்இருக்கிறது என்பது பகிரங்கமாகியிருக்கிறது.

இவ்வாறான ஒரு மனோநிலை படைத்த ஒரு மாணவன.; அவனது குடும்பத்தாருக்கும் சமூகத்துக்கும் எவ்வளவோ நற்சேவைகள் ஆற்ற முடியும்.

அதைவிடுத்து, இவ்வாறு உயிர்க்கொடையைச் செய்துகொள்வதன்மூலம் தீர்வுகள் எதுவும் கிடைக்கப்போவதில்லை.

எனவே எமது இளைய சமூகம் செந்தூரனை ஒரு முன்னுதாரணமாகக் கொள்ளாது, இலட்சியங்களை அடைவதற்கான வேறு வழிமுறைகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

தற்போதைய ஆளும்தரப்பும், அரசியல் தலைவர்களும் செந்தூரனின் உயிருக்குப் பதில் சொல்லியாக வேண்டும். தொடர் ஏமாற்றங்களும், விரக்திகளும் வஞ்சிப்புகளும் எஞ்சியிருக்கும் எமது இளைய தலைமுறையை வன்முறைப் பாதையை நோக்கி உந்துகிறது என்பதைச் சகல தரப்புகளும் புரிந்து கொள்ள வேண்டும்.

இனிமேலும் காலம் தாழ்த்தாது எவ்வித நிபந்தனைகளுமின்றி அரசியல் கைதிகளை விடுதலை செய்தாலே தமிழ் மக்களுடன் உண்மையான நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும்.மாறாக,உதட்டளவிலான நல்லிணக்கம் நாட்டை மீண்டும் இரத்தக்களரிக்குள்ளேயே தள்ளும்.

செந்தூரன் எடுத்த முடிவு ஏற்றுக்கொள்ளமுடியாத ஒன்றாக இருந்தபோதும்,அந்தத் தியாக சீலனுடைய இலட்சியம் நிறைவேற நாங்கள் ஒன்றிணைந்து போராடுவதே அவனுக்கு நாம் செலுத்துகின்ற அஞ்சலியாக அமையும்.

அவனது குடும்பத்தாரின் ஆற்றொணாத்துயரில் நாமும் பங்கு கொள்கிறோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Posts