தூயநீருக்காக நல்லூர் முன்றலில் இன்று இரண்டாவது நாளாகவும் தொடர்ந்த உண்ணாவிரதப் போராதப் போராட்டம் ஆளுனர் பள்ளிஹக்கார மற்றும் அரச அதிபர் வேதநாயகம் போன்றோரது நேரடித் தலையீட்டினால் சற்று முன்னர் முடிவிற்குக் கொண்டுவரப்பட்டிருக்கிறது.
உண்ணாவிரதிகள் அமர்ந்திருந்த நல்லூர் முன்றலுக்கு நேரடியாகச் சென்ற ஆளுனரும், அரச அதிபரும் எதிர்வரும் திங்கட்கிழமை இந்த நீர்மாசடைதல் தொடர்பாக உண்ணாவிரதிகளின் முக்கிய கோரிக்கைகளுக்குச் சாதகமான தீர்வொன்றினைப் பெற்றுத் தருவதாக உறுதியளித்ததனை அடுத்தே உண்ணாவிரதம் கைவிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
நீரைப்பருக வேண்டாம் என்றும், அறிக்கையை ஆராய்நது ஒரு கிழமைக்குள் முடிவை அறிவிப்பதாகவும், மத்திய அரசாங்கத்துடன் கலந்தாலோசித்து தூயநீருக்கான வழிமுறைகளை நடைமுறைப்படுத்துவதாக ஆளுநர் மற்றும், அரச அதிபர் உறுதிப்படுத்தியிருக்கின்றனர்.
இதற்கு முன்னர் வடக்கு மாகாண சபையின் முதலமைச்சரிடமிருந்து சாதகமான கடிதம் ஒன்று சற்று முன்னர் போராட்டக்காரர்களுக்கு அனுப்பப்பட்டதாகவும், அந்தக் கடிதத்தைப் போராட்டக்காரர்கள் திருப்பி அனுப்பிவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முதலமைச்சரினால் அனுப்பபட்ட கடிதத்தில்;
அ) உண்ணாவிரதிகள் சார்பில் ஆறு மேலதிக நிபுணர்களின் பெயர்களைத் தருமாறு கோரப்பட வேண்டும்,
ஆ) அவர்கள் ஏற்கனவே நியமிக்கப்பட்ட ஒன்பது நிபுணர்களுடன் சேர்ந்து புதிய மீள் உருவாக்கப்பட்ட நிபுணர்கள் குழுவாக செயற்படுவார்கள்,
இ) தற்போது இருக்கும் தரவுகளின் அடிப்படையில் சில கிணறுகளில் எண்ணெய், கிறீஸ் ஆகியவரை இருப்பது கண்டறியப்பட்டுள்ளன. வேறு சிலவற்றில் அவ்வாறு காணப்படவில்லை. இதன் காரணத்தினாலேயே பாதிக்கப்பட்ட இடங்களில் இருக்கும் நீரை உட்கொள்வது உசிதமில்லை என்று கருதுகின்றோம்,
ஈ) உரிய தீர்வு காணப்படும் வரையில் எம்மால் நீர் விநியோகம் தொடர்ந்தும் முன்வைக்கப்பட்டு வரும்,
உ) தர உறுதிப்பாடு, சீரான நீர்வழங்கல், நீர் பெறப்படும் மூலம் தொடர்பில் உரிய அதிகாரிகளின் மேற்பார்வை உறுதிப்படுத்தப்படும்,
ஊ) நைத்திரேற்று நீரில் கலந்திருப்பதையும் சில கிணறுகளில் எண்ணெய், கிறீஸ் கலந்திருப்பபதையும் அகற்ற நாம் மத்திய அரசையும், சர்வதேச நிறுவனங்களான உலக சுகாதார நிறுவனம் போன்றவற்றின் உதவியையும் நாட வேண்டியுள்ளது. போன்ற விடயங்கள் விதந்துரைக்கப்பட்டுள்ளதோடு,
இதற்கான நடவடிக்கைகள் உடனே எடுக்கப்படுவதனை உறுதிசெய்ய இதுகுறித்து கௌரவ ஆளுநருக்கும் தெரியப்படுத்தப்படும் என்றும், எனினும் செய்யப்பட்டு வரும் ஆய்வின் இறுதி அறிக்கை புதிய மீள் உருவாக்கப்பட்ட நிபுணர்கள் குழு கூடிய விரைவில் எமக்குச் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் முன்னர் தயாரிக்கப்பட்ட முதல்கட்ட அறிக்கையும் இறுதி அறிக்கையும் மத்திய அரசாங்கத்திற்கும், உலக சுகாதார நிறுவனம் போன்றவற்றுக்கும் அடிப்படை ஆவணங்களாக அவர்களின் மேலதிக நடவடிக்கைகளுக்கு அனுசரனையாக அனுப்பப்படும் என்றும் முதலமைச்சரால் அனுப்பபட்ட இந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளன.
முதலமைச்சரின் கடிதம் நிராகரிக்கப்பட்ட நிலையில் ஆளுநரும், யாழ்.மாவட்ட அரச அதிபரும் போராட்ட களத்துக்கு வருகை தந்து எதிர்வரும் திங்கள் கிழமை வரை கால அவகாசம் தரச் சொல்லி கோரியதை அடுத்து போராட்டம் முடிவுக்கு வந்ததாக தெரிகின்றது.