ஆளுநர் அல்ல அந்த ஆண்டவனே சொன்னாலும் வடக்கில் மேலதிகமாக இராணுவம் இருக்க முடியாது. அமைச்சர் பொ.ஐங்கரநேசன்!

கிளிநொச்சி கால்நடை சுகாதார பிரதிப் பணிப்பாளர் அலுவலகத்தில், மாகாணத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து வாழ்வாதார உதவிகளை வழங்கி வைக்கும் நிகழ்வு  புதன் கிழமை நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

வடக்கில் இருந்து இராணுவத்தை அனுப்புவதல்ல நோக்கம், இராணுவத்தை கொண்டு தமிழ் மக்கள் பயனைப் பெற்றுக்கொள்ள முடியும் என வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே பூநகரியில் தெரிவித்த கருத்து தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ஆளுநர் இவ்வாறான கருத்தை தெரிவித்திருந்தால் அது முற்றிலும் தவறானது, தமிழ் மக்களின் அபிலாசைகளுக்கும் விருப்பு வெறுப்புகளுக்கும் எதிரானது, யுத்தம் முடிவடைந்த பின்னர் மிக மிக அதிகளவான இராணுவத்தினர் இந்த மண்ணில் நிலைகொண்டிருக்கின்றார்கள் என அமைச்சர் தெரிவித்தார்.

இராணுவம் நிலைகொண்டிருக்கின்ற பெரும்பாலான நிலம் பொது மக்களுக்குரியது, எங்களுடைய விவசாய பண்ணைகளுக்குரியது, ஆகவே இராணுவத்தினர் இத்தகைய இடங்களில் இருந்து கொண்டு நாங்கள் இங்கு இருக்க வேண்டும் என்று கோருவதும் அதற்கு சார்பாக சிலர் கருத்துக்களை கூறுவதும் ஏற்றுக்கொள்ள முடியாதது என குற்றஞ்சாடியுள்ளார்.

இராணும் வெளியேற வேண்டும் என்ற எங்களுடைய கருத்தில் எவ்வித மாற்றமும் இல்லை. சிலரது கருத்துக்களின் படி இராணுவத்தினரிடம் இருந்து உதவிகளை பெற்றுக்கொள்ளலாம் அதற்கு அவர்கள் இங்கு இருக்க வேண்டும் என்பதே. ஆனால் அவ்வாறு இருக்க முடியாது. இராணுவம் என்பது தேசிய பாதுகாப்புக்குரியது. இலங்கையில் தற்போது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்ற சூழல் இல்லாத நிலையில் இவ்வளவு இராணுவம் வடக்கில் நிலைகொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை என தெளிவுபடுத்தினார்.

அத்தோடு சாதாரண சிவில் நடவடிக்கையில் இராணுவத்தினர் பங்குகொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை. கிளிநொச்சியில் உள்ள எங்களுடைய வட்டக்கச்சி விவசாய பண்ணையின் பெரும் பகுதி நிலத்தை இராணுவமும், சிவில் பாதுகாப்பு படைப்பிரிவுமே வைத்திருக்கின்றனர்.

எங்களை பொறுத்தவரை சிவில் பாதுகாப்பு திணைக்களமும் இராணுவம்தான். வடக்கு மாகாண சபை நிர்வகிக்க வேண்டிய முன்பள்ளிகளை அவர்கள் நிர்வகின்றார்கள், முன்பள்ளி ஆசிரியர்களை அவர்களே நியமிக்கின்றனர். வேதனம் வழங்குகின்றார்கள், போதாக்குறைக்கு முன் பள்ளி சிறார்களுக்கு சிவில் பாதுகாப்பு சின்னம் பொறிக்கப்பட்ட உடைகளை கூட வழங்கியிருக்கின்றார்கள். இது இராணுவத்தின் மேலாதிக்க செயற்பாடு.

எந்த வகையிலும் இதனை நாம் அனுமதிக்க முடியாது யார் என்ன சொன்னாலும் இராணுவம் வெளியில் போக வேண்டும். அந்த ஆண்டவனே வந்து சொன்னாலும் வடக்கில் இராணுவம் மேலதிகமாக இருக்க முடியாது. எங்களை பொறுத்தவரை இராணுவம் வெளியில் போக வேண்டும் என்பதே எங்களுடைய நிலைப்பாடு என வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.

Related Posts