ஆளுநரை நியமிக்கும் முழுமையான அதிகாரம் ஜனாதிபதிக்கே உள்ளது – பஷில்

வட மாகாண சபைக்கு ஆளுநரை நியமிக்கும் முழுமையான அதிகாரம் ஜனாதிபதிக்கே உள்ளது. அதனை யாரும் சவாலுக்கு உட்படுத்த முடியாது. அதனை எதிர்க்கும் அருகதையோ சட்ட உரிமையோ வட மாகாண சபைக்கோ அல்லது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கோ ஒருபோதும் இல்லை. அது தொடர்பில் கேள்வியெழுப்பவோ எதிர்ப்பு வௌியிடவோ கூட்டமைப்பினால் முடியாது என்று பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும் சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளருமான பஷில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

basil-rajapakse-pasil

வடக்குப் பற்றி நன்கு அறிந்த தெற்கைச் சேர்ந்த ஒருவரை வட மாகாண ஆளுநராக நியமி்க்கும் அதிகாரம் மத்திய அரசாங்கத்துக்கு இருக்கின்றது. நாட்டின் தலைவராக இராணுவ அதிகாரி ஒருவரை நியமிக்க முயற்சித்த கூட்டமைப்புக்கு முன்னாள் இராணுவ அதிகாரி ஒருவர் ஆளுநராக நியமிக்கப்படுவது கசக்கின்றதா? என்றும் அவர் கேள்வியெழுப்பினார்.

மாகாண ஆளுநர் என்பவர் மத்திய அரசாங்கத்தினால் நேரடியாக நியமிக்கப்படுகின்றவர். கூட்டமைப்புக்கு தேவையான ஒருவரை ஆளுநராக ஒருபோதும் நியமிக்க முடியாது. ஆளுநர் என்பவர் மத்திய அரசாங்கத்துக்கு விசுவாசமாக செயற்படக்கூடிய அரசாங்கத்தின் பிரதிநிதியாக இருக்கவேண்டும். இந்தியாக உள்ளிட்ட முழு உலகிலும் இதுதான் நடைமுறையாகும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

வட மாகாண சபை ஆளுநராக மேஜர் ஜெனரல் சந்திரசிறி மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளமை மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதனை கடுமையாக எதிர்த்துள்ளமை குறித்து வினவியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் இந்த விடயம் குறித்து அவர் மேலும் கூறியதாவது ;

வட மாகாண சபைக்கு ஆளுநரை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உள்ளது. அது தொடர்பில் கேள்வியெழுப்பும் சட்ட உரிமையோ அதிகாரமோ கூட்டமைப்புக்கு இல்லை. மாகாண சபைக்கும் மத்திய அரசாங்கத்துக்கும் இடையில் தொடர்புகளை ஏற்படுத்துவராகவே ஆளுநர் செயற்படுகின்றார்.

வட மாகாணம் என்பது நாட்டிலிருந்து பிரிபட்டதல்ல. இலங்கையின் ஒரு மாகாணம். இந்நிலையில் மத்திய அரசாங்கத்தின் வட மாகாண சபைக்கான பிரதிநிதியாக யாரையும் நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உள்ளது. பல மாநிலங்கள் உள்ள இந்தியாவில் கூட இவ்வாறு மத்திய அரசாங்கத்துக்கு வேண்டப்பட்டவர்களே ஆளுநர்களாக நியமிக்கப்படுகின்றனர். இந்தியா மட்டுமல்ல முழு உலகிலும் இவ்வாறு தான் நிலைமை உள்ளது.

அரசாங்கத்தையும் ஜனாதிபதியையும் பொறுத்தவரை எமக்குத் தேவையானவர்களே நாங்கள் ஆளுநாக நியமிப்போம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பொறுத்தவரை அவர்களுக்கு வட மாகாண சபை நிர்வாகம் கிடைத்துள்ளது. மக்கள் பிரதிநிதிகள் உள்ளனர். வட மாகாண சபை அமைச்சரவை உள்ளது. முதலமைச்சர் பதவி ஆகியவை உள்ளன.

இந்நிலையில் ஆளுநர் பதவியிலும் கூட்டமைப்புக்குத் தேவையானவர்களை நியமிக்க முடியாது. ஜனாதிபதிக்கு விசுவாசமான வடக்கு பற்றித் தெரிந்த தெற்கைச் சேர்ந்த ஒருவரே ஆளுநராக நியமிக்கப்படுவார். அதனை யாராலும் எதிர்க்க முடியாது.

கூட்டமைப்பு எதிர்க்கின்றது என்பதற்காக அவர்கள் கூறுகின்றவரை ஆளுநராக நியமிக்க முடியாது. நாட்டின் ஏனைய பகுதிகளிலும் ஜனாதிபதி தனக்கு தேவையானவரையே ஆளுநராக நியமித்துள்ளார். அதுதான் சம்பிரதாயமாக உள்ளது. அதனை மாற்ற முடியாது.

கேள்வி: கூட்டமைப்புக்கு ஒத்துழைப்பு வழங்க தயார் என்றும் கூட்டமைப்பு எங்களுடன் ஒத்துழைக்கவேண்டும் என்று அரசாங்கம் கூறுகின்றது. இந்நிலையில் இந்த விடயத்தில் ஒத்துழைப்பு என்ற நோக்கத்துக்காக கூட்டமைப்பின் கோரிக்கைக்கு செவிமடுக்கலாமே?

பதில்: ஒரு விடயத்தைப் புரிந்துகொள்ளவேண்டும். அதாவது நாங்கள் நியமிக்கும் ஆளுநருடன் ஒத்துழைப்புடன் செயற்படவேணடும் என்பதே எமது கோரிக்கையாகும். எம்முடன் ஒத்துழைப்புடன் வேலைசெய்ய செய்யவேண்டும் என்று கூட்டமைப்பு கருதினால் ஆளுநருடன் ஒத்துழைப்புடன் செயற்டலாம்.

கேள்வி முன்னாள் இராணுவ அதிகாரி ஒருவர் வேண்டாம் என்றுதானே கூட்டமைப்பு கூறுகின்றது

புதில் முன்னாள் இராணுவ அதிகாரி ஒருவரை வட மாகாண ஆளுநாக நியமிக்கவேண்டாம் என்று கூறுகின்ற அருகதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இல்லை. அதாவது நாட்டின் தலைவராக இராணுவ அதிகாரி ஒருவரை நியமிக்க முயற்சித்த கூட்டமைப்புக்கு முன்னாள் இராணுவ அதிகாரி ஆளுநராக நியமிக்கப்படுவது கசக்கின்றதா? என்று வினவுகின்றோம். அவர் முன்னாள் இராணுவ அதிகாரி மட்டுமேயாவார். தற்போது இராணுவ அதிகாரியாக இல்லை. எம்மைப் பொறுத்தவரை வடக்குப்பற்றி தெரிந்த ஒருவரை ஆளுநராக நியமிக்கவேணடியது அவசியமாகும். அதனை யாராலும் மாற்ற முடியாது.

கூட்டமைப்பை பொறுத்தவரை அவர்களுக்கு தனிப்பட்டவர்கள் குறித்து பிரச்சினைகள் இருக்க முடியாது. மாறாக அவர்களின் கொள்கைகளே அவர்களின் முரண்பாட்டுக்கு காரணமாக அமைகின்றது. வட மாகாண ஆளுநர் தொடர்பில் தனிப்பட்ட ரீதியில் கூட்டமைப்புக்கு எந்தப் பிரச்சினையும் இருக்க முடியாது. ஆனால் கொள்கைகள் அடிப்படையில் அவர்களுக்கு பிரச்சினை இருக்கலாம் என்று நாங்கள் கருதுகின்றோம். அதற்காக அவர்கள் கூறுகின்றவரை ஆளுநராக நியமிக்க முடியாது.

வடக்கைப் பற்றி தெரிந்த எமக்கு விசுவாசமானவரையே நாங்கள் நியமிப்போம். மாகாண சபையை பொறுத்தமட்டில் ஆளுநர் என்பவர் ஒரு அதிகாரி மட்டுமேயாவார். அதிகாரம் முழுவதும் ஆளும் கட்சிக்கே உள்ளது. அந்தவகையில் வட மாகாண சபையின் ஆளும் கட்சியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு காணப்படுகின்றது. இந்நலையில் அவர்களினால் மக்களுக்கு சேவையாற்ற முடியும். ஆளுநர் என்பவர் முதலமைச்சர் அல்ல. அவர் ஒரு அதிகாரி. மத்திய அரசாங்கத்துக்கும் மாகாண அரசாங்கத்துக்கும் இடையில் இணைப்பாளராக கடமையாற்றுகின்றவர். எனவே அவரை மாற்றிவிட்டு தங்களுக்கு தேவையானவரை நியமிக்குமாறு கோர முடியாது.

கேள்வி தாம் அதிகாரத்தில்உள்ள மாகாண சபைக்குத் தேயைன ஆளுநரை கூட்டமைப்பு கோர முடியாதா?

பதில் வட மாகாண சபையின் ஆட்சியையும் அதிகாரத்தையும் வைத்துக்கொண்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மாகாண சபைக்கான ஆளுநர் பதவியையும் கோருவது நியாயமற்றதாகும். ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றுக்கு நாங்கள் ஊடகவியாளர்களை அழைக்கும்போது குறிப்பிட்ட ஊடகவியலாளரை அனுப்புமாறு நாங்கள் கோர முடியாது. அது பத்திரிகை ஆசியருக்கு உள்ள உரிமையாகும். அதேபோன்று தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு வருமாறு கூட்டமைப்பை கோரியுள்ளோம். ஆனால் கூட்டமைப்பில் உள்ள ஒருவரை குறிப்பிட்டுக்காட்டி அவரை அனுப்புமாறு நாங்கள் கோர முடியாது. கூட்டமைப்பின் தலைமை விரும்புகி்ன்ற பொருத்தமானவரையே அனுப்புவார்கள். அதுதான் ஜனநாயக பண்பாகவுள்ளது.

அதுபோன்ற வட மாகாண சபைக்காக மத்திய அரசாங்கத்தின் பிரதிநிதியாக எமக்குத் தேவையானவரையே நியமிப்போம். அது தொடர்பில் எவரும் கேள்வியெழுப்ப முடியாது.

கூட்டமைப்பினர் தற்போது மக்களின் பிரச்சினைகள் குறித்து பேசிக்கொண்டிருக்காமல் சர்வதேச பிரச்சினைகள் குறித்து பேசுகின்றனர். மக்களுக்கு சேவையாற்றாமல் தொடர்ச்சியாக அரசாங்கத்தை குறைகூறுகின்றனர். வடக்கில் தற்போது கல்வி சுகாதாரம் மீன்பிடி விவசாயம் நீர்ப்பாசனம் போன்ற துறைகள் வீழ்ச்சிகண்டுள்ளன. பல்வெறு திட்டங்களை முன்னெடுக்க முடியுமாக இருந்தாலும் வட மாகாண சபை எதனையும் செய்யாமல் உள்ளது. மக்களுக்கு சேவையாற்றுங்கள் என்றே நாங்கள் கூறுகின்றொம்.

ஆனால் வட மாகாண சபை ஆளும் கட்சியானது அதிகாரிகளுடன் சண்டை போடுவதையும் ஊடகவியலாளர்களுடன் முரண்படுவதையும் வழக்கமாகக்கொண்டுள்ளது. மக்களை சநதிப்பதில்லை. மாவட்டங்களுக்கு இடையில் பிரச்சினைகள் ஏற்படுத்தப்படுகின்றன. அவர்களின் தனிப்பட்ட பிரச்சினைகள் குறித்தே பேசிக்கொண்டிருக்கின்றனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் தனிப்பட்ட ரீதியில் என்னை சந்தித்து பல்வேறு விடயங்களை கூறுகின்றனர். எம்மை அடிக்கடி சந்தித்து பல விடயங்களை குறிப்பிடுகின்றனர். அந்தவகையில் பார்க்கும் பொது கூட்டமைப்பிலும் உள்பிரச்சினைகள் அதிகரித்துவிட்டதாகவே உணர்கின்றோம் என்றார்.

Related Posts