ஆளுநருக்கு எதிரான நடவடிக்கைக்கு ஆதரவு – தவராசா

வடமாகாண சபையின் செயற்பாடுகளுக்கு வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி தடையாக இருக்கின்றார் என்பதற்கு ஆதாரங்களுடன் உரிய விடயங்களை படிமுறையாக தந்தால், வடமாகாண ஆளுநருக்கு எதிராக வடமாகாண சபை எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஆதரவு வழங்க தயாராகவிருப்பதாக வடமாகாண எதிர்க்கட்சி தலைவர் சின்னத்துரை தவராசா சபையில் தெரிவித்தார்.

thavarasa

வடமாகாண சபையின் 2015ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டம் தொடர்பான விவாதத்துக்கான முதல் நாள் அமர்வு கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் புதன்கிழமை (17) நடைபெற்றது. அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம், எதிர்க்கட்சி தலைவருக்கு உரையாற்ற வழங்கிய சந்தர்ப்பத்திலேயே தவராசா மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், ‘வரவு – செலவுத் திட்ட முன்மொழிவுக்கு முன்பாக வடமாகாண அமைச்சர்களுக்கு மேலதிகமாக ஒதுக்கப்பட்ட அமைச்சு பொறுப்புக்கள் பற்றிய விபரங்களை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சபையில் சமர்ப்பிக்க வேண்டும். வடமாகாண சபையில் நாங்கள் முன்வைக்கும் திட்ட முன்மொழிவுகள் மக்களுக்கு பயன்படவேண்டும். எதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்படுகின்றதோ அது மக்களை அபிவிருத்தி செய்ய பயன்படுவதாக அமைய வேண்டும்.

13ஆவது திருத்தச் சட்டத்தில் என்ன குறிப்பிடப்பட்டுள்ளதோ, அதனை செயற்படுத்த வடமாகாண சபை முனையவேண்டும். அதற்கு மேலதிகமாக நடைமுறைப்படுத்த முடியாது. இருப்பதை முழுமையாக செயற்படுத்துவதற்கு வடமாகாண சபை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வடமாகாண சபையின் நிதியை, மத்திய அரசு கையாள்கின்றது எனக்கூற முடியாது. வடமாகாண சபைக்கு இருக்கின்ற அதிகாரங்களை யாருக்கும் விட்டுக்கொடுக்காமல் வடமாகாண சபையே அதனை வைத்திருந்து மக்களின் அபிவிருத்திக்காக பயன்படுத்த வேண்டும் என்று கூறினார்.

வடமாகாண சபைக்கு இருக்கவேண்டிய பொலிஸ் அதிகாரங்களை மத்திய அரசு தரவில்லை. இதனால் அதிகாரத்தை பயன்படுத்தி கட்டளைகள் இடக்கூடிய செயற்பாடுகளை எங்களால் முன்னெடுக்க முடியவில்லையென ஆளுங்கட்சி உறுப்பினர் கந்தையா சர்வேஸ்வரன் தெரிவித்தார்.

Related Posts