புதிய அரசியலமைப்பு முன்மொழிவுகளில் முதலமைச்சரின் ஆலோசனையின் பிரகாரம் அரச பிரதிநிதியொருவரை ஜனாதிபதி நியமிக்க முடியும் என பரிந்துரை செய்துள்ளதாக வட மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே சிவஞானம் குறிப்பிட்டுள்ளார்.
ஆளுநரின் அதிகாரங்களை குறைக்க வேண்டும் என வட மாகாண சபை பரிந்துரை செய்துள்ளதாக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் குறித்து வினவிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தமது முன்மொழிவுகளில் ஆளுநர் என்ற பதம் பயன்படுத்தப்படவில்லை என சுட்டிக்காட்டிய வட மாகாண சபையின் அவைத் தலைவர், ஆளுநரின் அதிகாரங்களை குறைப்பது குறித்தோ அதிகரிப்பது குறித்தோ எதனையும் சுட்டிக்காட்டவில்லை என குறிப்பிட்டார்.
முதலமைச்சரின் ஆலோசனையின் பேரில் மாநில சபையை அழைக்கவோ ஒத்திவைக்கவோ கலைக்கவோ அரசின் பிரதிநிதிக்கு அதிகாரம் இருக்கும் எனவும் தமது முன்மொழிவுகளில் கூறியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.