ஆளுநரால் நிலம் ஆக்கிரமிக்கப்படுகிறது – மாவை

mavai mp inஇராணுவத்தின் படைத் தளபதியாக இருந்த ஜி.ஏ.சந்திரசிறி, வடமாகாண ஆளுநராக இருக்கின்றமையினாலேயே வடக்கில் காணிகள் ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்றன என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா நேற்று திங்கட்கிழமை (14) தெரிவித்தார்.

தேசிய மீனவ ஒத்துழைப்பு பேரவையினால் யாழ்., மத்திய பேருந்து நிலையத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (15) நடத்தப்படவுள்ள போராட்டம் தொடர்பிலான கலந்துரையாடல் நேற்று திங்கட்கிழமை (14) யாழ்.பாடி விருந்தினர் விடுதியில் இடம்பெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில் கூறியதாவது, ‘ஆளுநரினால் தான் வடக்கில் இராணுவ ஆதிக்கம் பிரயோகிக்கப்படுகின்றன. ஆளுநரின் பின்னணியில் தான் இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறுகின்றன.

வடமாகாண ஆளுநரை நியமிக்கும் போது மாகாண முதலமைச்சருடன் கலந்துரையாடலை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு செய்யப்படவில்லை.

மீனவ சமூகம், விவசாயிகள், பொதுமக்கள் சொந்த இடங்கள் இல்லாமல் முகாம்களில் தங்கியிருக்கும் நிலையில், வடக்கில் தொடர்ந்தும் இராணுவ ஆட்சியை நிலைநாட்டுவதற்காக தான் போர்க்குற்றவாளியான ஒருவர் ஆளுநராகத் தொடர்ந்தும் நியமிக்கப்பட்டுள்ளார்.

இராணுவ தேவைக்காகவும், இராணுவத்தின் வர்த்தக நடவடிக்கைகளுக்காகவும் தமிழ் மக்களின் வாழ்வாதாரத்தை அழித்து வருகின்றனர்.

வாழ்வாதாரத்தை இழந்து நிற்கின்ற மக்கள் சொந்த கிராமங்களில் மீளக்குடியமர்த்தப்பட வேண்டும். மேலும் வடக்கில் சிவில் நிர்வாகம் கொண்டுவரப்பட வேண்டும்’ என அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts