ஆலயங்கள் வியாபார நிலையங்களாக மாறிவருவது சமூகத்தில் ஒரு வேதனைக்குரிய விடயம் என கோப்பாய் ஆசிரிய கலாசாலை பிரதி அதிபர் ச.லலீசன் தெரிவித்தார்.
அகில இலங்கை இந்து மாமன்ற ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் சபையின் அனுசரணையுடன் நாவலர் விழா இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் அவர் உரையாற்றுகையில்,
ஆறுமுகநாவலர் என்பவர் ஒரு சமயப்போராளியென்றால் யாரும் அதை மறுப்பதற்கில்லை.சமயத்தை நிலைநிறுத்தும் நிலையைக் கொண்டு அவர் வாழ்ந்திருக்கின்றார்.
நாவலர் காலத்தில் மட்டுமன்றி இன்றைய காலத்திலும் பொது எதிரி என்று நான் குறிப்பிடுவது அரசியலை அல்ல மதமாற்றத்தை தான்.
நாவலர் அதனையும் எதிர்த்துப் போராடியிருக்கின்றார்.
இன்றைய உலகிலே பிளாஸ்ரிக் வாளிகளைக் காட்டி சமயத்திலே மக்களைச் சேர்த்து விடலாம் என்ற நப்பாசையோடு எத்தனையோ பேர் எங்கள் மத்தியில் அலைகின்றார்கள்.
இந்த நிலைமை யாழ்ப்பாணத்திலே இருக்கின்றது. சமயம் என்பது அரசியல் அல்ல ஒழுக்கம். வாழ்க்கைக்கான வழித்தடத்தைக் காட்டுகின்ற பாதை இது ஒருபோதும் வியாபாரமாக மாறிவிடக்கூடாது.
எனவே நாவலரது வழிகாட்டல் போல இந்த சமூகம் செயற்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த நிகழ்விற்கு நல்லை ஆதின முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள்,யாழ்.பல்கலைக்கழக பேராசிரியர் இராசரத்தினம் குமார வடிவேல் , யாழ்.பல்கலைக்கழக ஓய்வு நிலைப் பேராசிரியர் கலைவாணி இராமநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.