இந்தியாவில் இருந்து நேற்றை தினம் கொண்டுவரப்பட்ட ஆக்ஸ்போர்ட் -அஸ்ட்ரசெனிகா கொவிட் -19 தடுப்பூசிகளை இன்றைய தினம் ஆறு வைத்தியசாலைகளில் ஏற்றப்படவுள்ளது.
அடுத்த நான்கு நாட்களுக்குள் ஐந்து இலட்சம் தடுப்பூசிகளையும் பயன்படுத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பிரதி சுகாதார பணிப்பாளர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.
தடுப்பூசிகளின் தரம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், எந்தவித அச்சமும் இல்லாது தடுப்பூசிகளை பயன்படுத்த முடியும் என அரசாங்கமும், சுகாதார அமைச்சும், பணியகமும் முழுமையான வாக்குறுதி வழங்குவதாகவும் அவர் கூறினார்.
இலங்கையில் கொவிட் -19 வைரஸ் தொற்றுநோயை தடுக்கும் விதமாக இந்தியாவில் இருந்து நேற்று இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட ஆக்ஸ்போர்ட் -அஸ்ட்ரசெனிகா கொவிட் -19 தடுப்பூசிகளை இன்று தொடக்கம் ஆறு வைத்தியச சாலைகளில் வழங்கப்படுகின்றது.
அதற்கமைய கொழும்பு தேசிய வைத்தியசாலை, ராகம வைத்தியசாலை, களுபோவிலை வைத்தியசாலை, அங்கொடை ஐ.டி.எச் வைத்தியசாலை, ஹோமாகம வைத்தியசாலை, முல்லேரியா வைத்தியசாலை என ஆறு வைத்தியசாலைகளில் இன்றைய தினம் கொவிட் -19 தடுப்பூசி வழங்கப்படவுள்ளது.
சுகாதார பணியாளர்கள், இராணுவம் மற்றும் பொலிசாருக்கு முதல் கட்டத்தில் இந்த தடுப்பூசிகளை வழங்கவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
நேற்றைய தினம் கொண்டுவரப்பட்டுள்ள தடுப்பூசிகள் தற்போது வரையில் 26 மருந்து களஞ்சியசாலைகளில் களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், இன்று தொடக்கம் அடுத்த நான்கு நாட்களில் சகல தடுப்பூசிகளையும் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பிரதி சுகாதார பணிப்பாளர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.
சுகாதார பணியாளர்களில் 25 வீதமானோருக்கும், இராணுவத்தில் 25 வீதமானோருக்கும், பொலிஸில் 25 வீதமானோருக்குமான தற்போது கைவசமுள்ள ஐந்து இலட்சம் தடுப்பூசிகளைகளையும் பயன்படுத்தவும், அடுத்த கட்டத்தில் கொண்டுவரப்படும் தடுப்பூசிகளை வயது அடிப்படையில் பொது மக்களுக்கு பயன்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்நிலையில் இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்டுள்ள தடுப்பூசிகளை முதல் தடவையாக இலங்கையில் பயன்படுத்தவுள்ள நிலையில் இந்த தடுப்பூசிகளின் தரம் உறுதிப்படுத்தப்பட்டதாகவும், எந்தவித அச்சமும் இல்லாது இந்த தடுப்பூசிகளை பயன்படுத்த முடியும் என அரசாங்கமும், சுகாதார அமைச்சும், பணியகமும் முழுமையான வாக்குறுதி வழங்கும் எனவும் பிரதி சுகாதார பணிப்பாளர் தெரிவித்தார்.