ஆறாவது ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியது மும்பை இந்தியன்ஸ்

217328_457767300983254_255910275_nஇந்தியன் பிறீமியர் லீக் தொடரின் 6ஆவது பருவகாலத்திற்கான சம்பியனாக மும்பை இந்தியன்ஸ் அணி தெரிவாகியுள்ளது. சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்கெதிரான இறுதிப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 23 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இந்தியன்ஸ் அணி, 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 148 ஓட்டங்களைப் பெற்றது.

முதலாவது ஓவரிலேயே முதலாவது விக்கெட்டை இழந்த அவ்வணி, இரண்டாவது ஓவரில் 2ஆவது விக்கெட்டையும், 3ஆவது விக்கெட்டை 4ஆவது ஓவரிலும் இழந்து தடுமாறியது. அதன் பின்னர் ஒரு கட்டத்தில் 9.3 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 52 ஓட்டங்களைப் பெற்றுத் தடுமாறியது.

ஆனால் 5ஆவது விக்கெட்டுக்காக அம்பத்தி ராயுடு, கெரான் பொலார்ட் இருவரும் 5ஆவது விக்கெட்டுக்காகச் சிறப்பாக ஆடியதோடு, ராயுடுவின் விக்கெட்டின் பின்னர் கெரான் பொலார்ட் மிகச்சிறப்பாக ஆடி அவ்வணிக்குப் பலமான நிலையை ஏற்படுத்தினார்.

துடுப்பாட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி சார்பாக துடுப்பாட்டத்தில் கெரான் பொலார்ட் 32 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 60 ஓட்டங்களைக் குவித்தார். தவிர, அம்பத்தி ராயுடு 36 பந்துகளில் 37 ஓட்டங்களையும், டினேஷ் கார்த்திக் 26 பந்துகளில் 21 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி சார்பாக டுவைன் பிராவோ 42 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களையும், அல்பி மோர்க்கல் 3 ஓவர்களில் 12 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களையும், மோகித் சர்மா, கிறிஸ் மொறிஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

149 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய சென்னை சுப்பர் கிங்ஸ் அணி, 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 125 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 23 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

முதலாவது ஓவரை வீசிய லசித் மலிங்கவின் ஓவரிலேயே முதலிரண்டு விக்கெட்டுக்களும் வீழ்த்தப்பட்டதோடு, சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் விக்கெட்டுக்கள் தொடர்ச்சியாக வீழ்த்தப்பட்டன. அவ்வணியின் முதல் 6 விக்கெட்டுக்களும் 39 ஓட்டங்களுக்கும், 8 விக்கெட்டுக்கள் 58 ஓட்டங்களுக்கும் வீழ்த்தப்பட்டிருந்தன.

துடுப்பாட்டத்தில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி சார்பாக அணித்தலைவர் மகேந்திரசிங் டோணி 45 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 63 ஓட்டங்களைப் பெற்றார். வேறு எந்த வீரரும் 20 ஓட்டங்களுக்கு அதிகமாகப் பெற்றிருக்கவில்லை.

பந்துவீச்சில் மும்பை இந்தியன்ஸ் அணி சார்பாக ஹர்பஜன் சிங் 3 ஓவர்களில் 14 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களையும், மிற்சல் ஜோன்சன் 19 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களையும், லசித் மலிங்க 22 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களையும், பிரக்ஜான் ஓஜா, றிஷி தவான், கெரான் பொலார்ட் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

இந்தச் சம்பியன் பட்டம் ஐ.பி.எல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி பெற்ற முதலாவது சம்பியன் பட்டமாகும்.

Related Posts