தேசிய கட்சியான பா.ஜனதா தமிழகத்தின் ஒவ்வொரு இடைத்தேர்தலிலும் வேட்பாளரை நிறுத்த தவறுவது இல்லை. ஆனால் சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவதா? வேண்டாமா? என்பதில் பா.ஜனதா தொடர்ந்து குழப்பத்தில் இருந்து வந்தது. யாரை வேட்பாளராக நிறுத்தலாம்? என்று தீவிர பரிசீலனை நடந்தது.
இதில் தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், நடிகை கவுதமி, இசை அமைப்பாளர் கங்கை அமரன் ஆகியோரின் பெயர்கள் அடிபட்டது. முதலில் நடிகை கவுதமி தான் சிறப்பான தேர்வு என பா.ஜனதா கருதியது. அவரை கட்சியில் இணைத்துக்கொண்டு போட்டியிட செய்யலாம் என்று பா.ஜனதா மூத்த நிர்வாகிகள் சிலர் விரும்பினர்.
இதுதொடர்பாக பா.ஜனதாவை சேர்ந்த மூத்த நிர்வாகி ஒருவர் கவுதமியிடம் சென்று பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிகிறது. ஆனால் அதற்கு கவுதமி தரப்பில் இருந்து ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடுவது குறித்து அதிகாரபூர்வமான தகவல்கள் எதுவும் வரவில்லை.
இதனால் கடந்த பாராளுமன்ற தேர்தலின்போது பா.ஜனதாவில் இணைந்த பிரபல இசை அமைப்பாளரான கங்கை அமரனை நிறுத்த பா.ஜனதா முடிவு எடுத்துள்ளது.
தேர்தலில் போட்டிடுவதற்கு கங்கை அமரனும் இசைவு தெரிவித்துள்ளார். எந்த நேரத்திலும் இதற்கான அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாகலாம்.
ஆர்.கே.நகர் தொகுதியில் பூத் வாரியாக ஆய்வு நடத்தி, மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து பா.ஜனதா அறிக்கை தயாரித்துள்ளது. திராவிட கட்சிகளின் ஆட்சியில் வடசென்னை மக்களுக்கு எந்த வித நன்மையும் நடக்கவில்லை என்பதை பிரசாரத்தின்போது முன்வைக்க பா.ஜனதா வியூகம் வகுத்துள்ளது.
ஆர்.கே.நகர் தொகுதியில் தெலுங்கு மொழி பேசும் மக்கள் கணிசமாக உள்ளனர். அவர்களின் வாக்குகளை ஈர்க்க வெளிமாநிலத்தில் உள்ள பா.ஜனதா நிர்வாகிகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளன. அதே சமயத்தில் மத்திய மந்திரிகள், பா.ஜனதாவின் தேசிய தலைவர்கள் பிரசாரம் செய்ய வருவதற்கு வாய்ப்பு மிகவும் குறைவு என்று கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.