ஆரம்பமாகியது வட மாகாண சபையின் மூன்றாவது அமர்வு

வடமாகாண சபை அமர்வு இன்று (10) செவ்வாய்க்கிழமை கைதடியில் அமைந்துள்ள கட்டிடத்தில் நடைபெற்று வருகின்றது.இதில்

வடமாகாண சபையில் த.தே.கூ ஆர்ப்பாட்டம்

வட மாகாண சபையில் வலி. வடக்கில் ஏற்படுகின்ற வீடழிப்புக்களை கண்டித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் சுலோக அட்டைகளை தாங்கியவாறு கோசங்களை எழும்பியுள்ளனர்.

இதில் வலி. வடக்கு மக்களின் மீள்குடியேற்றம் மற்றும் அங்கு ஏற்படுகின்ற வீடழிப்புகள், வடக்கில் சிங்கள குடியேற்றம், நில அபகரிப்பு ஆகியவற்றை கண்டித்து வட மாகாண சபை உறுப்பினர் கனகலிங்கம் சிவாஜிலிங்கம், சபையில் எழுந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கு சுலோ அட்டைகளை வழங்கினார். இதனையடுத்து கூட்டமைப்பின் சக உறுப்பினர்களும் தமது எதிர்ப்புக்களைத் தெரிவித்தனர்.

சிங்களவர்களை எங்கே குடியேற்றுவது?

வடக்கிலுள்ள தமிழ் மக்கள் கொழும்பில் தங்கியிருப்பது போல் சிங்கள மக்களும் யாழ்ப்பாணத்தில் குடியேற முடியாதா?. முடியாதாயின் சிங்கள மக்களை நாங்கள் எங்கே குடியேற்றுவது’ என வட மாகாண சபையின் எதிர்க்கட்சி உறுப்பினர் செனவிரத்ன எ.டி.தர்மபால கேள்வி எழுப்பினார்.

வலி. வடக்கில் இடம்பெறுகின்ற வீடழிப்பினை கண்டித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் கோசங்களை எழும்பியுள்ளனர். இதன்போது கருத்து தெரிவிக்கையிலேயே செனவிரத்ன எ.டி.தர்மபால மேற்கண்டவாறு கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்து உரையாற்றிய வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன், ‘யாழ்ப்பாணத்திலுள்ள தமிழ் மக்கள் தாங்களாகவே விரும்பியே கொழும்பில் குடியேறியுள்ளனர்’ என தெரிவித்தார்.

‘தற்போது இராணுவமும் அரசும் வடக்கில் சிங்கள மக்களை திட்டமிட்டு குடியேற்றி வருகின்றது. யாழ்ப்பாண தமிழ் மக்கள் தாங்களாகவே விரும்பி கொழும்பில் வசித்து வருகின்றனர். இந்நிலையிலும் 1983ஆம் ஆண்டு கொழும்பிலிருந்த தமிழ் மக்கள் அரசாங்கத்தினால் விரட்டியடிக்கப்பட்டனர்.

இதனால் தான் பல தமிழ் மக்கள் தமது உயிர் பாதுகாப்பிற்காக வெளிநாடுகளுக்கு சென்று வசித்து வருகின்றனர். வலி. வடக்கில் இடம்பெறுகின்ற வீடழிப்பினை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம்’ என்று முதலமைச்சர் மேலும் தெரிவித்தார்.

வடமாகாண சபைக்கான செங்கோல் தயாரிப்பு

வட மாகாண சபைக்கான செங்கோல் தயாரிக்கப்பட்டு வருவதாக சபையின் அவைத்தலைவர் கந்தையா சிவஞானம் தெரிவித்தார்.

வட மாகாண சபைக்கான செங்கோல் அமைப்பதற்கான குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்வரும் வாரங்களில் செங்கோலுடன் வடமாகாண சபை அமர்வுகள் ஆரம்பிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

செங்கோல் அமைப்பதற்கான குழுவின் தலைவராக கந்தையா சிவஞானம், ஆலோசகர்களாக வடமாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் மற்றும் வடமாகாண கல்வி அமைச்சர் தம்பிராசா குருகுலராஜா ஆகியோரும் வடிவமைப்பு உதவியாளர்களாக யாழ். பல்கலைக்கழக பேராசிரியர்களான பொ.கிருஷ்ணன், செல்வி. ஸ்ரீதேவி, ச.சதானந்தன், ம.மனோகரன் ஆகியோரும் மேற்பார்வையாளராக முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர் என அவைத்தலைவர் கந்தையா சிவஞானம் மேலும் தெரிவித்தார்.

Related Posts