ஆயுள்தண்டனைக் கைதிகள் முன்விடுதலை – நளினி மனு தள்ளுபடி

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினியை முன் விடுதலை செய்ய மத்திய அரசின் அனுமதியை கட்டாயமாக்கும் சட்டபிரிவை எதிர்த்து சிறையில் உள்ள நளினி சார்பில் உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

nalini

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எச்.எல்.தத்து தலைமையிலான அமர்வு முன்பு இந்த மனு விசாரணைக்கு வந்த போது இந்த மனுவை ஏற்க விரும்பவில்லை என்று தெரிவித்து அந்த அமர்வு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

சிபிஐ விசாரித்த ஒரு வழக்கில் தண்டனை பெற்றுள்ள ஒருவரை சிறையிலிருந்து முன்விடுதலை செய்ய மாநில அரசுக்கு மத்திய அரசின் அனுமதி தேவை என்ற குற்றவியல் நடைமுறை சட்டத்தின் 435இன் 1ஆம் பிரிவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் நளினி மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். கடந்த 15 ஆண்டுகளில், 10 ஆண்டுகளுக்கும் குறைவாக சிறையில் இருந்த 2,200 ஆயுள் தண்டனை கைதிகளை தமிழக அரசு முன்விடுதலை செய்திருக்கிறது என்றும், சிபிஐ விசாரித்த வழக்கு என்ற ஒரே காரணத்தினால் தனக்கு மட்டும் முன்விடுதலை வழங்க மாநில அரசு மத்திய அரசிடம் அனுமதி கோருவது அரசியலமைப்பிற்கு விரோதமானது என்றும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

கடந்த 1998ஆம் ஆண்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நளினியின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து கடந்த 2000ஆம் ஆண்டு தமிழக ஆளுநர் உத்தரவிட்டிருந்தார்.

இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைவழக்கில் ஆயுள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ள ஏழு குற்றவாளிகளை தமிழக அரசு விடுதலை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய அரசு தொடுத்த மனுக்கள் தொடர்பிலான விசாரணை இன்னமும் சிறப்பு அரசியல் சாசன அமர்வு முன்பு நிலுவையில் உள்ளது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கின் முக்கிய குற்றவாளிகளான முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவரின் கருணை மனுக்களை விசாரித்து முடிவெடுக்க இந்திய குடியரசுத் தலைவர் எடுத்துக்கொண்ட பத்து ஆண்டுகளுக்கும் மேலான கால தாமதத்தை காரணம் காட்டி, அவர்களின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து இந்திய உச்சநீதிமன்றம் கடந்த பிப்ரவரி மாதம் 18ம் தேதியன்று தீர்ப்பளித்திருந்தது.

Related Posts