ஆயுர்வேத வைத்தியர் வீட்டில் ஆயுத முனையில் துணிகர கொள்ளை! யாழ். நவாலியில் சம்பவம்!

யாழ்ப்பாணத்தில் ஆயுர்வேத வைத்தியர் ஒருவரின் வீட்டில் 19 பவுண் நகை மற்றும் 16 ஆயிரம் ரூபா பணம் என்பன ஆயுதமுனையில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாதோரினால் அபகரிக்கப்பட்டுள்ளது.இச்சம்பவம் நேற்று மாலை 6. 15 மணியளவில் நவாலி கிழக்கு பிரசாத் வீதியிலுள்ள சந்தைக்கு முன்பாக உள்ள ஆயுர்வேத வைத்தியர் ஒருவரின் வீட்டில் இடம்பெற்றுள்ளது.

லியோன் புஸ்பராணி என்ற ஆயுர்வேத பெண் வைத்தியரின் வீட்டிலே இக்கொள்ளை இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

குறித்த ஆயுர்வேத வைத்தியசாலை வெள்ளிக்கிழமைகளில் வழமையாக திறப்பது இல்லை. இதனை அறிந்து கொண்ட இனம் தெரியாத சிலர் மாலை 5.30 மணியளவில் நேற்று முன்தினம் வைத்தியம் செய்ய வந்தோம் மிகுதிப் பணம் தரப்படவில்லை. என்று சொல்லிக்கொண்டு அவ்வீட்டினை அவதானித்ததோடு உறவினர் ஒருவருக்கு வைத்தியம் பார்க்க வரலாமா என ஆயுர்வேத வைத்தியரிடம் கேட்டுச் சென்றுள்ளனர்.

இதன் பின்னர் மாலை 6.15 மணியளவில் இருவர் மோட்டார் சைக்கிள் தலைக்கவசத்துடன் வீட்டிற்கு உள்ளே வந்து அம் மருத்துவ பெண்மணியின் கழுத்தில் கத்தியை வைத்து அவர் அணிந்திருந்த நகைகளையும், அவரது வயதான தாயாரிடம் இருந்த நகையையும், வீட்டில் இருந்த 16 ஆயிரம் ரூபா பணத்தினையும் துணிகரமாக திருடிக்கொண்டு மோட்டார் சைக்கிளில் ஏறிச் தப்பிச்சென்றுள்ளனர்.

இதனைத் தடுக்க முற்பட்ட அவரது கணவரான ஞானம் லியோன் என்பவரையும் அத்திருடர்கள் தாக்கிவிட்டு வீட்டில் இருந்த மின் குமிழ்களையும் அடித்து நொருக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக வீட்டின் உரிமையாளரினால் மானிப்பாய் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

Related Posts