ஆயுத ஊழல் வழக்கில் இருந்து கோத்தாபாய விடுவிப்பு

முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே தம்பி கோத்தபய ராஜபக்சே. இவர் முந்தைய ராஜபக்சே அரசில் ராணுவ மந்திரியாக இருந்தார். இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் நடந்த அதிபர் தேர்தலில் ராஜபக்சே படுதோல்வி அடைந்தார்.

அதை தொடர்ந்து ராஜபக்சே மற்றும் அவரது குடும்பத்தினர் மீதும் ஊழல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அப்போது மிதக்கும் ஆயுத கிடங்கை போலீசார் கண்டுபிடித்தனர். அதில் இருந்து 3 ஆயிரம் தானியங்கி துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. அவை காலி துறைமுகத்தில் 20 கண்டெய்னர்களில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது.

அதில், ராணுவ மந்திரியாக இருந்த கோத்தபய ராஜபக்சேவுக்கு தொடர்பு இருப்பதாக கருதி அவரை கைது செய்து வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு நேற்று கொழும்பு கூடுதல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.

அதில் ஆஜரான அரசு வக்கீல் கோத்தபய ராஜபக்சே மீதான இந்த ஆயுத ஊழல் வழக்கை விசாரிக்க அரசு விரும்பவில்லை என கூறி வழக்கை வாபஸ் பெற்றது. அதை தொடர்ந்து இந்த வழக்கில் இருந்து கோத்தபய ராஜபக்சேவை மாஜிஸ்திரேட்டு நிஷாந்தா பெர்ரீஸ் விடுவித்து உத்தர விட்டார்.

மிதக்கும் ஆயுத கிடங்கு ஒரு தனியார் பாதுகாப்பு நிறுவனமாகும். இது ராணுவ அமைச்சகத்துடன் இணைந்து இந்த ஆயுதக் கிடங்கை அமைத்துள்ளது. இதில் ‘கடல் மார்ஷல்கள்’ பணியில் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் சோமாலியா கடற்கொள்ளையர்களிடம் இருந்து கப்பல்களை காப்பாற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Posts