ஆயுதமேந்திய வன்முறைக் கட்சிகளுடன் தன்னால் சேர்ந்திருக்க முடியாதாம்! இப்படிக் கூறுகிறார் முதலமைச்சர் விக்கி

ஈ.பி.ஆர்.எல்.எவ், புளொட், ரெலோ போன்ற ஆயுதமேந்திய வன்முறைக் கட்சிகளுடன் சேர்ந்திருக்க முடியாது. ஆகவேதான் நான் தமிழரசுக் கட்சியைச் சார்ந்திருக்கின்றேன் –

vicky0vickneswaran

இவ்வாறு தெரிவித்தார் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன். தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகளுக்கும் வட மாகாணசபை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுக்குமிடையிலான கலந்துரையாடல் ஒன்று நேற்று வியாழக்கிழமை வட மாகாண முதலமைச்சர் காரியாலயத்தில் இடம்பெற்றது.

அச்சமயத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனின் கோரிக்கைக்குப் பதிலளிக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“கடந்த மாகாணசபைத் தேர்தலின்போது, ‘முதலமைச்சர் வேட்பாளராக நான் நிற்க வேண்டுமென்றால் கூட்டமைப்பில் இருக்கின்ற அனைத்துக் கட்சிகளும் என்னை ஏற்றுக்கொண்டால் மாத்திரமே நிற்பேன்’ என்று சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டிருந்த விடயத்தை அவருக்கு ஞாபகப்படுத்தி, நீங்கள் கூட்டமைப்பினுடைய ஒரு பிரதிநிதியாகத்தான் கடந்த தேர்தலில் பங்குபற்றியிருந்தீர்கள், ஆகவே நீங்கள் கூட்டமைப்புக்குத்தான் உரியவர், எனவே தனியொரு கட்சியைச் சார்ந்தவராக பிரதிபலிக்கக்காமல் பொது நிலைப்பாட்டைத்தான் நீங்கள் எடுக்கவேண்டும்” என்று முதலமைச்சர் விக்னேஸ்வரனிடம் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கேட்டுக் கொண்டார்.

இதற்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் பதிலளிக்கையில் – “நான் இதைக் கூறுவதையிட்டு நீங்கள் ஆத்திரப்படக் கூடாது. நான் ஈ.பி.ஆர்.எல்.எவ், புளொட், ரெலோ போன்ற ஆயுதமேந்திய வன்முறைக் கட்சிகளுடன் சேர்ந்திருக்க முடியாது. ஆகவேதான் நான் தமிழரசுக் கட்சியைச் சார்ந்திருக்கின்றேன்” – என்று கூறினார்.

இதற்கு ஏனைய மூன்று கட்சிகளின் பிரதிநிதிகளும் ஆட்சேபனை தெரிவித்தனர். இந்தக் கருத்தானது உங்கள் மீது வைத்திருக்கின்ற மதிப்பை மலினப்படுத்துவதாக இருக்கின்றது என அவர்கள் குறிப்பிட்டதுடன், நீங்கள் இப்படியான ஓர் அபிப்பிராயத்தை வைத்திருக்கின்றவராக இருந்திருந்தால் நிச்சயமாக இதை நீங்கள் தேர்தலுக்கு முன்பே எங்களுக்கு கூறியிருக்க வேண்டும். தேர்தல் காலத்தில் பிரபாகரன், மாவீரன்… போன்ற வார்த்தைகளைப் பிரயோகித்து வாக்கு வேட்டையில் ஈடுபட்டிருக்கக் கூடாது, இப்படியான செயல்களைச் செய்துவிட்டு இன்று நீங்கள் இப்படிக் கூறுவது, ஒரு யோக்கியமான அரசியலாகத் தெரியவில்லை என்று சுட்டிக்காட்டினார்கள்.

அத்துடன், கூட்டத்திலே வட மாகாணசபையின் நிர்வாகப் பிரச்சினைகள் மற்றும் உறுப்பினர்களுடைய பிரச்சினைகள் போன்றவை தொடர்பிலும் ஆராயப்பட்டன. குறிப்பாக வடமாகாண அமைச்சர்கள் கூட தங்களுடைய செயற்பாடுகளில் கூடுதலாக தத்தமது கட்சிகளைச் சார்ந்த நிலைப்பாட்டையே வெளிப்படுத்துகிறார்களே தவிர ஒரு கூட்டமைப்பு என்கின்ற பொதுவான நிலைப்பாட்டை எடுப்பதில்லை என்ற ஒரு குற்றச்சாட்டும் அங்கு முன்வைக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம், தமிழரசுக் கட்சி சார்பில் நடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சம்பந்தன், ஈ.சரவணபவன், எம்.ஏ.சுமந்திரன், ஈ.பி.ஆர்.எல்.எவ் சார்பில் சுரேஸ் பிரேமச்சந்திரன், சிவசக்தி ஆனந்தன், ரெலோ சார்பில் செல்வம் அடைக்கலநாதன், வினோநோகராதலிங்கம் புளொட் சார்பில் கந்தையா சிவநேசன் (பவன்), வட மாகாண அமைச்சர்கள் பொ.ஐங்கரநேசன், டெனீஸ்வரன், ப.சத்தியலிங்கம், த.குருகுலராஜா ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

Related Posts