இளைஞர்கள் ஏந்திய ஆயுதங்கள் இன்று மெளனிக்கப்பட்ட நிலையிலும், போரைச் சாட்டாக வைத்து இராணுவம் வடக்கு, கிழக்கைப் பலவிதத்திலும் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றது.
பயத்தின் காரணத்தால் மக்கள் ஆயுதம் ஏந்தியவரை அணைத்துச் செல்ல வேண்டிய ஒரு துர்ப்பாக்கிய நிலையில் உள்ளார்கள்.
ஜனநாயகம் துளிர் பெற்றிருந்த இந்த நாட்டில் ஆயுத கலாசாரம் படம் எடுத்து ஆடத் தொடங்கி இன்று விசித்திரமான விதங்களில் விதை போட்டுப் பயிராகிக் கொண்டிருக்கின்றது என்று வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு தேவிபுரம் ‘அ’ பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட மூத்த பிரஜைகள் இல்லத் திறப்பு விழா நேற்று இடம்பெற்றது. இதில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தனது உரையில் மேலும் தெரிவித்ததாவது:
போரின் கடைசிக் கட்டத்தில் மக்கள் முள்ளிவாய்க்காலுக்குத்தள்ளப்பட்டமை போன்று நாடெங்கும் பரந்து வாழ்ந்த தமிழ் பேசும் சமூகத்தினர் வடக்கு, கிழக்குக்குத் தள்ளப்பட்டார்கள்.
பலர் வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளார்கள்.
எமது தமிழ் பேசும் சமுதாயமானது பெரும் சமூக மாற்றத்தினுள் அகப்பட்டுத் திண்டாடிக் கொண்டிருக்கின்றது. எமது இளமை நாள்களில் நாம் இலங்கை எங்கும் சென்று வந்தோம். உதாரணத்துக்கு திஸ்ஸமகாராம என்ற தென் பகுதிக் கிராமத்தில் இருந்த வயல் நிலங்களில் பெரும் பான்மையானவை தமிழர்களுக்கே சொந்தமாக இருந்தன.
அங்கு வசிக்கையில் எளிய வாழ்க்கை வாழ்ந்தார்கள் அவர்கள்.
ஆனால் போதிய வருமானம் பெற்றார்கள். சிங்கள மக்களுடன் மிகவும் சுமுகமான உறவினை வைத்திருந்தார்கள. சரளமாகச் சிங்களம் பேசினார்கள். சிங்கள மக்கள் பலருக்குப் பலவிதமான உதவிகள் செய்தார்கள்.
1958 ஆம் ஆண்டு நடந்த கலவரத்தின் பின்னர் அவர்கள் யாவரும் வடக்கு, கிழக்கை நோக்கிப் பயணிக்க நேர்ந்தது. பலரின் காணிகள் இன்னும் அவர்களின் பெயர்களில் இன்றும் உள்ளன. ஆனால் வேற்றார் ஆக்கிரமித்து விட்டார்கள்.
இந்த முதியோர் இல்லம் பிரான்ஸில் உள்ள கொடையாளர் ஒருவரின் தாராள சிந்தையின் பிரதிபலிப்பாகக் கட்டப்பட்டுள்ளதாகவும், தனது தாயார் ஏழாலை பூபதி ரீச்சர் ஞாபகமாகக் கட்டிக் கொடுத்துள்ளார் என்றும் அறிகின்றேன்.அவருக்கு நன்றிகள்.
முதியோர் பராமரிப்பு என்பது மூத்த பிரஜைகளின் தனித்துவ தேவைகளைத் தேர்ந்தறிந்து அவற்றைப் பூர்த்தி செய்வதாகும். அதில் ஒரு முக்கிய பங்கை வகிப்பது, அம் முதியோரின் மனோநிலையாகும்.
மதிப்புடன் முதுமை அடைவதையே யாவரும் விரும்புகின்றனர். அவர்களை ஏனோ தானோ என்று நடத்தினால் அவர்கள் மனங்கள் புண்படும். ஒவ்வொருவரையும் மாண்புடன் மதிப்புடன் நடத்துவது என்பது கஷ்டமான காரியமாக இருக்கலாம் ஆனால் அவ்வாறு அவர்களை நடத்தும் போது தான் மூத்த பிரஜைகளின் மனங்கள் குளிர் கின்றன.
வடமாகாணத்தில் பலர் தமது உற்றார் உறவினர்களைப் போரின் தாக்கத்தால் இழந்த நிலையில் உள்ளார்கள். இருக்க இடம் இருந்தும் இயல் பாகப் பேசிப் பழக இல்லத்தார் எவரும் இன்றித் தவிக்கின்றார்கள்.
சிலருக்கு இல்லத்தில் உற்றார், உறவினர் இருந்தும் அதே கதிதான். இன் முகத்துடன் சிரித்துப் பேச முடியாத நிலை.
முதியோர் தமது வாழ்க்கை முடியுந் தறுவாயில் இருக்கின்றது என்ற எண்ணத்தில் எல்லாவற்றையுங் கைவிட்ட ஒரு மனோ நிலைக்குச் செல்லாது ‘எம்மால் இந்த ஊருக்கு எதனைச் செய்து கொடுக்கலாம்?’ என்ற கேள்விக்குப் பதில் காண முனைய வேண்டும்.
உதாரணத்துக்கு அழிந்து போய்க் கொண்டிருக்கும் எமது பாரம்பரிய விவசாய, மீன்பிடி, மற்றைய தொழில்கள் சார்ந்த அறிவினை எமது பின்வருவோருக்கு அறிவுறுத்தும் வகையில் சிறு சிறு கைநூல்களாக நீங்கள் வெளிக் கொண்டுவரலாம்.
இறுவெட்டுக்களில் வடித்து வைக்கலாம். சிறு சிறு கைத்தொழில்களில் சேர்ந்து ஈடுபடலாம். முக்கியமாக ஒரு கேள்வியை எங்களிடமே நாங்கள் கேட்க வேண்டும். ஒரு பரோபகாரி எமக்கு இந்த இல்லத்தைத் தந்துள்ளார்.
அது அவரின் பெருந்தன்மை. அதைப் பெற்றுக் கொண்டுள்ள நாங்கள் கைமாறாக எதனை அவருக்குச் செய்யப் போகின்றோம் என்று சிந்திக்க வேண்டும். உங்களுக்குச் சமூகம் தந்ததை அந்த சமூகத்திற்கு ஏதாவதொரு வழியில் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்ற கடப்பாடு உங்களுக்கு உண்டு என்றார்.