வவுனியா வடக்கின் புதூர் பகுதியில் ஆயுதங்களுடன் தலைமறைவான நபரைத் தேடுவதற்கு பெருமளவு இராணுவத்தினர் அந்தப் பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.
புதூர் நாகதம்பிரான் ஆலயத்துக்குச் செல்லும் பிரதான வீதியில் நேற்றிரவு ஆயதங்களுடன் நபர் ஒருவர் செல்வதாகப் பொலிஸாருக்குத் தகவல் கிடைத்துள்ளது.
குறித்த நபரைக் கைது செய்யும் நோக்குடன் புளியங்குளம் பொலிஸ் நிலையத்தில் பணிபுரியும் பொலிஸார் சிவில் உடையில் மறைந்திருந்தனர். எனினும் பொலிஸாரைக் கண்ட நபர் தான் கொண்டு சென்ற ஆயுதங்களை வீதியில் போட்டு விட்டு காட்டுக்குள் தப்பிச் சென்றுள்ளார்.
வீதியில் வீசப்பட்ட கைக்குண்டு,மற்றும் கைத்துப்பாக்கிகிகளைப் பொலிஸார் மீட்டனர்.
இதனையடுத்து இராணுவம்,பொலிஸார் மற்றும் சிறப்பு அதிரடிப்படையினர், புலனாய்வுபிரிவினர், அப்பகுதியில் குவிக்கப்பட்டனர்.
புதூர் மற்றும் கனகராயன்குளம் நகருக்கு அண்மித்த பிரதேசங்களில் ராணுவத்தினர் வீதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். புதூர் காட்டுப் பகுதியிலும் தீவிர தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
சுமார் 600க்கும் மேற்பட்ட இராணுவத்தினர் அப்பகுதியில் குவிக்கப்பட்டு தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அப்பகுதி மக்களிடையே அச்சமான நிலமை ஏற்பட்டுள்ளது.