தீவகத்தில் அரசின் ஆதரவுடன் இயங்கும் ஆயுதக்குழுவின் அராஜகத்தை உடன் தடுத்து நிறுத்துமாறு தேர்தல்கள் ஆணையாளரிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
நெடுந்தீவில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் மீது கடந்த வியாழக்கிழமை கடும் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் மூவர் காயமடைந்தனர். ஒருவர் தொடர்ந்து வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இத்தாக்குதலை வன்மையாகக் கண்டித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இது தொடர்பில் தேர்தல் ஆணையாளரிடமும் முறையிட்டுள்ளது.
“அரசின் ஆதரவுடன் இயங்கும் ஆயுதக்குழுவைச் சேர்ந்த உறுப்பினர்களே இந்தக் கேவலமான செயலில் ஈடுபட்டுள்ளனர். தீவகத்தில் குறித்த கட்சியினரின் அடாவடித்தனங்கள் தலைவிரித்தாடுகின்றன” என்று தெரிவித்தார் சுமந்திரன். “இந்தப் பகுதியில் சுதந்திரமான நீதியான தேர்தல்கள் இதுவரை நடைபெறவில்லை. கடந்த காலங்களில் அங்கு தேர்தல் பரப்புரைக்காகச் சென்ற கூட்டமைப்பின் பிரமுகர்கள், வேட்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள், ஈ.பி.டி.பி. கட்சியினரின் தாக்குதல்களுக்கு இலக்காகினர்.
வடமாகாணசபைத் தேர்தலிலும் வன்முறைகளைக் கட்டவிழ்த்து மக்களின் வாக்குகளைக் கொள்ளையடிக்க அரச சார்பு ஆயுதக் குழுக்கட்சியினர் தயாராகிவிட்டனர் என்பதையே நெடுந்தீவுத் தாக்குதல் எடுத்துக்காட்டுகின்றது என்று குற்றஞ்சாட்டினார் சுமந்திரன். “இந்த அராஜகத்தை அனுமதிக்க முடியாது. எமது வேட்பாளர்கள், ஆதரவாளர்கள் இந்த அச்சுறுத்தல்களுக்கு அடிபணியமாட்டார்கள். இதனைத் தேர்தலில் நிரூபித்துக் காட்டுவோம்” என்று அவர் மேலும் தெரிவித்தார்.