20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் தென்ஆப்பிரிக்க அணி, ஆப்கானிஸ்தானை போராடி வென்றது.
6–வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் தற்போது சூப்பர்–10 சுற்று நடந்து வருகிறது. சூப்பர்–10 சுற்றில் அங்கம் வகிக்கும் அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இதன்படி குரூப்1–ல் இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, இலங்கை, வெஸ்ட் இண்டீஸ், ஆப்கானிஸ்தான் அணிகளும், குரூப்2–ல் இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், வங்காளதேசம் அணிகளும் இடம் பெற்றுள்ளன.
ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.
இந்த நிலையில் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்று மாலை நடந்த சூப்பர்–10 சுற்றின் 8–வது லீக் ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா– ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. தென்ஆப்பிரிக்க அணியில் ஸ்டெயின் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக டேவிட் வைஸ் இடம் பிடித்தார். டாஸ் ஜெயித்த தென்ஆப்பிரிக்க கேப்டன் பாப் டு பிளிஸ்சிஸ் முதலில் பேட் செய்வதாக அறிவித்தார். இங்கு நடந்த முந்தைய இரு ஆட்டங்களில் இமாலய ரன்கள் குவிக்கப்பட்ட போதிலும் அவை வெற்றிகரமாக சேசிங் செய்யப்பட்டன. ஆனால் ‘இது பகல் ஆட்டம்; பனிப்பொழிவுக்கு வாய்ப்பில்லை’ என்பதால் பிளிஸ்சிஸ் தைரியமாக இந்த முடிவை எடுத்தார்.
குயின்டான் டி காக்கும், அம்லாவும் தென்ஆப்பிரிக்காவின் இன்னிங்சை தொடங்கினர். முழுக்க முழுக்க பேட்டிங்குக்கு மட்டுமே உரித்தான இந்த ஆடுகளத்தில் வழக்கம் போல் பேட்ஸ்மேன்களின் ஆதிக்கம் எட்டிப்பார்த்தது. அம்லா 5 ரன்னில் கேட்ச் ஆனாலும் அடுத்து வந்த ஆட்டக்காரர்கள் அதிரடி விருந்துக்கு குறை வைக்கவில்லை. டி காக் 45 ரன்களும் (31 பந்து, 6 பவுண்டரி, 2 சிக்சர்), கேப்டன் பிளிஸ்சிஸ் 41 ரன்களும் (41 ரன், 27 பந்து, 7 பவுண்டரி, ஒரு சிக்சர்) விளாசி ஆட்டம் இழந்தனர்.
இதன் பிறகு டிவில்லியர்ஸ் அணியை தூக்கி நிறுத்தினார். 27 ரன்களில் இருந்த போது கேட்ச் கண்டத்தில் இருந்து தப்பித்த டிவில்லியர்ஸ், அதன் பிறகு சுழற்பந்து வீச்சாளர் ரஷித்கானின் ஒரே ஓவரில் 4 சிக்சர், ஒரு பவுண்டரி, ஒரு ரன் என்று மொத்தம் 29 ரன்கள் சேகரித்து அட்டகாசப்படுத்தினார். 20 பந்துகளில் 29 ரன்கள் எடுத்திருந்த டிவில்லியர்ஸ் இறுதியில் 29 பந்துகளில் 64 ரன்கள்( 4 பவுண்டரி, 5 சிக்சர்) எடுத்த திருப்தியுடன் வெளியேறினார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் தென்ஆப்பிரிக்க அணி 5 விக்கெட் இழப்புக்கு 209 ரன்கள் குவித்தது.
பின்னர் ‘இழப்பதற்கு எதுவும் இல்லை’ என்ற மனநிலையுடன் குட்டி அணியான ஆப்கானிஸ்தான் அடித்து நொறுக்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரரான விக்கெட் கீப்பர் முகமது ஷாசத், பந்தை நாலாபக்கமும் விரட்டியடித்து, எதிரணி பவுலர்களுக்கு தண்ணி காட்டினார். கைல் அப்போட்டின் 2–வது ஓவரில் மட்டும் அவர் 3 சிக்சர்களை பறக்க விட்டார். ஆச்சரியம் அளிக்கும் வகையில் 3 ஓவருக்குள் அந்த அணி 47 ரன்கள் எடுத்து விட்டது. தென்ஆப்பிரிக்க பவுலர்களை மிரள வைத்த முகமது ஷாசத் 44 ரன்களில் (19 பந்து, 3 பவுண்டரி, 5 சிக்சர்) கிறிஸ் மோரிசின் பந்து வீச்சில் கிளீன் போல்டு ஆனார்.
அடுத்து வந்த வீரர்களும் முடிந்தவரை துரிதம் காட்டினர். 10 ஓவர்களில் ஆப்கானிஸ்தான் 2 விக்கெட்டுக்கு 100 ரன்களை கடந்தது. ஆனால் அதே உத்தேவகத்தை கடைசி வரை கொண்டு செல்ல முடியவில்லை. 20 ஓவர்களில் ஆப்கானிஸ்தான் அணி 172 ரன்களில் ஆல்–அவுட் ஆனது. இருப்பினும் இது தான் டாப்–8 டெஸ்ட் அணிக்கு எதிராக, உறுப்பு நாடு ஒன்றின் அதிகபட்ச ஸ்கோராகும். இதன் மூலம் தென்ஆப்பிரிக்கா 37 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரைஇறுதி வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டது.
2–வது தோல்வியை தழுவிய ஆப்கானிஸ்தான் ஏறக்குறைய போட்டியை விட்டு வெளியேறியது. 27 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றிய தென்ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் கிறிஸ் மோரிஸ் ஆட்டநாயகன் விருதை பெற்றார்.
பீல்டிங்கின் போது இடது காலில் தசைப்பிடிப்பு ஏற்பட்டு தென்ஆப்பிரிக்க வீரர் டுமினி பாதியில் வெளியேறினார். அடுத்த ஆட்டத்தில் அவர் ஆடுவது சந்தேகம் தான்.