ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது இலங்கை

உலகக் கிண்ணத் தொடரில் இன்று இடம்பெற்ற, ‘ஏ’ பிரிவு லீக் ஆட்டத்தில் நான்கு விக்கெட்டுக்களால் இலங்கை வெற்றி பெற்றுள்ளது.

CRICKET-WC-2015-SRI-AFG

இன்றைய போட்டியில் இலங்கை அணியை ஆப்கானிஸ்தான் அணி எதிர்கொண்டது.

முன்னதாக லீக் ஆட்டத்தில் இலங்கை அணி 98 ஓட்டங்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்திடம் மோசமான தோல்வியை சந்தித்ததோடு, ஆப்கானிஸ்தான் அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் 105 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பங்களாதேஷிடம் வீழ்ந்தது.

இந்தநிலையில் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று இடம்பெற்றது.

முதலில் நாணயசுழற்சியில் வென்ற இலங்கை அணி களத்தடுப்பில் ஈடுபட முடிவு செய்து, ஆப்கானிஸ்தானை துடுப்பெடுத்தாடப் பணித்தது.

இதன்படி களமிறங்கிய அந்த அணி 49.4 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்த நிலையில் 232 ஓட்டங்களைப் பெற்றது.

அடுத்ததாக 233 ஓட்டங்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணிக்கு ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான லகிரு திருமானே மற்றும் தில்ஷான் ஆகியோர் ஓட்டங்கள் எதுவும் பெறாத நிலையில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.

அணியின் முக்கிய வீரரான குமார் சங்கக்கார ஏழு ஓட்டங்களை மட்டுமே பெற்றுக் கொடுக்க திமுத் கருணாரத்ன 23 ஓட்டங்களை எடுத்து வௌியேறினார்.

இந்தநிலையில் ஜோடி சேர்ந்த மஹெல ஜெயவர்த்தன மற்றும் மெத்தியூஸ் ஆகியோர் நிதானமாக ஆடி ஓட்டங்களை குவித்தனர்.

தொடர்ந்து மஹெல ஜெயவர்த்தன 100 ஓட்டங்களுடனும் மெத்தியூஸ் 44 ஓட்டங்களுடனும் வௌியேறினர்.

இவ்வாறு சற்று தடுமாற்றத்தை எதிர்நோக்கிய இலங்கை அணியை அடுத்ததாக களமிறங்கிய திஸர பெரேரா அதிரடியாக ஆடி வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.

இவர் 26 பந்துகளை எதிர்கொண்டு ஒரு சிக்சர் மற்றும் ஆறு பவுண்டரிகள் அடங்களாக 47 ஓட்டங்களைக் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காது களத்தில் இருந்தார்.

இதன்படி 48.2 ஓவர்களில் ஆறு விக்கெட்டுக்களை மட்டுமே இழந்த நிலையில் 236 ஓட்டங்களைக் குவித்து இலங்கை வெற்றியைத் தனதாக்கியது.

போட்டியின் சிறப்பாட்டக்காரராக மஹெல தெரிவுசெய்யப்பட்டார்.

இதேவேளை இன்றைய மற்றய போட்டியில் இந்திய தென்னாபிரிக்க அணிகள் மோதுகின்றன. முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியஅணி தவானின் 137 ஒட்டங்களுடன் 307 ஒட்டங்களை குவித்தது.

308 என்ற வெற்றி இலக்கை நொக்கித்துடுப்பெடுத்தாடும் தென்னாபிரிக்க அணி சற்று முன் வரை 2விக்கெட்டுக்களை இழந்து 53 ஒட்டங்களைப் பெற்றுள்ளது

Related Posts