சூப்பர் ஸ்டார் ரஜினியின் கோச்சடையான் திரைப்படத்தை நாளை ஆன்லைனில் உலகம் முழுவதும் பிரிமியர் காட்சியாக திரையிடப் போவதாக அறிவித்துள்ளது ஈராஸ் நிறுவனம்.
படத்தின் இயக்குநர் சவுந்தர்யாவே இதனை வீடியோவில் அறிவித்துள்ளார்.
கடந்த மே 23-ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது கோச்சடையான். தமிழில் இந்தப் படத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. தெலுங்கில் பரவாயில்லை எனும் அளவுக்கு வசூல் அமைந்தது. ஆனால் இந்தியில் எதிர்ப்பார்த்த அளவுக்குப் போகவில்லை.
தமிழகத்தில் 50 வது நாளை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறது இந்தப் படம்.
சென்னையில் 40 அரங்குகளில் இன்னும் படக் காட்சிகள் நடக்கின்றன.
இந்த நிலையில் படத்தை ஆன்லைனில் நாளை ஜூன் 28-ம் தேதி வெளியிட தயாரிப்பாளரும் இயக்குநரும் முடிவு செய்துள்ளனர்.
ஈராஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இந்தப் படத்தை நாளை காணலாம்.
ஏற்கெனவே கோச்சடையான் படத்தின் திருட்டு வீடியோ இணையங்களில் வெளியாகிவிட்டது. அதை அவ்வப்போது தடுத்து வந்தார்கள். இதைவிட நாமே அதிகாரப்பூர்வமாக வெளியிட்டால் வருமானமாவது வருமே என்ற நினைப்பில் இந்த முடிவுக்கு வந்திருக்கிறார்கள்.