ஆன்மீகத்தின் மூலமே சிறந்த சமுதாயம் மலரும். திருவெம்பாவை காலத்தில் அனைவரும் சமய, சமூக பணிகளில் ஈடுபட வேண்டும் என சைவ மகா சபையின் பொதுச் செயளாலர் ப.நந்தகுமார், திங்கட்கிழமை (22) வேண்டுகோள் விடுத்தார்.
சைவ மகா சபையின் ஊடகவியலாளர் சந்திப்பு யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற போது, அதில் கலந்துகொண்டு கருத்துக்கூறுகையிலேயே நந்தகுமார் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்துக்கூறுகையில்,
இளைய தலைமுறையை ஆன்மீகத்தில் நாட்டமுடையவர்களாக வளர்த்தெடுப்பதன் மூலமே எதிர்காலச் சந்ததியை சிறப்பாக கட்டியெழுப்ப முடியும். இவ்வாறான ஆன்மீகச் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.
தமிழ்ச் சமூகம் தற்போது கலாச்சார சீரழிவுகளை நோக்கித் தள்ளப்பட்டுள்ளது. எமது எதிர்காலச் சந்ததியை இவ்வாறான பிரழ்வுகளில் இருந்து மீட்பதற்கு தற்போதுள்ள ஒரேவழி ஆன்மீகம் மட்டுமே.
இதனால் சைவமகா சபை பல்வேறு ஆன்மீக சமுதாய செயற்றிட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. குறிப்பாக வருடந்தோறும் திருவெம்பாவை காலத்தில் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள் இந்த வருடமும் தொடரவுள்ளது.
திருவெம்பாவை தொடக்க தினமாக எதிர்வரும் சனிக்கிழமை (27) காலை 9.30 மணி முதல் 2 மணி வரை தொண்டைமானாறு செல்வச் சந்திதியான் ஆச்சிரமத்தில் வருடாந்த ஒன்றுகூடல் நடைபெறவுள்ளது.
மறுநாள் ஞாயிற்றுக்கிழமை (28) காலை 7 மணியிலிருந்து மாலை 6 மணிவரை சம்பில்துறை சம்புநாத ஈஸ்வரத்தில் இருந்து காரைநகர் ஈழத்துச் சிதம்பரம் வரை பாதயாத்திரை இடம்பெறவுள்ளது.
இந்த ஆன்மீகச் செயற்பாடுகளில் இளைஞர், யுவதிகளை பெருமளவில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம் எனத்தெரிவித்தார்.