ஆனையிறவு உப்பளத்தின் மூலம் வருடத்திற்கு 20 தொடக்கம் 25 ஆயிரம் மெற்றிக் தொன் உப்பு உற்பத்தி செய்ய எண்ணியுள்ள அதேவேளை, 3500 பேருக்கு வேலைவாய்ப்பையும் பெற்றுகொடுக்க வாய்ப்புள்ளதாக பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் வி.சிவஞானசோதி புதன்கிழமை (27) தெரிவித்தார்.
அச்சுவேலிக் கைத்தொழிற்பேட்டையின் அங்குரார்ப்பண நிகழ்வு புதன்கிழமை (27) இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
அச்சுவேலிக் கைத்தொழிற் பேட்டையிலுள்ள நிலங்கள் முதலீட்டாளர்களுக்கு 30 வருடகால குத்தகைக்கே வழங்கப்பட்டு வருகின்றன. அத்துடன், யாழ்ப்பாணத்து முதலீட்டாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு இடங்கள் ஒதுக்கப்படுகின்றன.
உளளூர் மூலப்பொருட்களை பயன்படுத்தும் உற்பத்தியாளர்கள், ஏற்றுமதிக்கான வாய்ப்பைக் கொண்ட உற்பத்தியாளர்கள், முன்னேற்றகரமான தொழில்நுட்பத்தைப் பாவிக்கக்கூடிய உற்பத்தியாளர்கள் மற்றும் அதிகளவானவர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கக்கூடிய உற்பத்தியாளர்கள் என்பவர்களுக்கு கைத்தொழிற்பேட்டையில் இடங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
கைத்தொழிற்பேட்டையின் இடத்துக்காக, 61 முதலீட்டாளர்கள் விண்ணப்பங்கள் செய்த போதிலும் எங்களுடைய நிபந்தனைகளின் அடிப்படையில் 7 முதலீட்டாளர்கள் மட்டுமே தற்போது தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.
மின் பொருளியல் துறையில் ஜனாதிபதியிடம் விருது பெற்ற முயற்சியாளரும், உணவு மற்றும் பானங்கள் உற்பத்தியாளர், கழிவு கடதாசி மீள் சுழற்சி செய்யும் உற்பத்தியாளர், பைபர் கண்ணாடி உற்பத்தியாளர், பிளாஸ்திக் குழாய் உற்பத்தியாளர், மீன்பிடி வலை உற்பத்தியாளர், உலர் உணவு உற்பத்தியாளர், ஆகிய 7 முதலீட்டாளர்களும் இவ்வாறு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இந்த கைத்தொழிற் பேட்டையானது கேந்திர மத்திய நிலையமாகவுள்ளது. ஏனெனில் கைத்தொழிற்பேட்டைக்கு அண்மையில், பலாலி விமான நிலையம், காங்கேசன்துறை துறைமுகம் மற்றும் புகையிரத நிலையம் ஆகியன காணப்படுகின்றன.
அதேவேளை ஆனையிறவு உப்பளத்தின் தொழிற்சாலையை திருத்தியமைக்க பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் நிதியில் இருந்து அமைச்சர் பஸில் ராஜபக்ஷ 100 மில்லியன் ரூபாயை ஒதுக்கியுள்ளார். இதன் மூலம், ஆனையிறவில் 330 ஏக்கரில் 20 ஆயிரம் தொடக்கம் 25 ஆயிரம் மெற்றிக்தொன் உப்பு வருடத்திற்கு உற்பத்தி செய்யப்படவுள்ளது.
அதேபோல அல்லாரையில் தும்பு தொழிற்சாலை, வதிரியில் பாதணிகள் தொழிற்சாலை, நீர்வேலியில் மின் பொறியியல் உற்பத்தி கிராமம், நீர்வேலியில் வாழைநார் உற்பத்தி கிராமம், மாசியப்பிட்டியில் பனைசார்ந்த உற்பத்தி கிராமம் என்பன அமைப்பதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.