வல்வெட்டித்துறையிலிருந்து திருகோணமலைக்கு திருமணச் சடங்கின் பின்னான விருந்துக்கு காரில் பயணித்த இருவர், துப்பாக்கி ரவைகளை வைத்திருந்தினர் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவில் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
வாடகைக் காரில் பயணித்த போது, ஆனையிறவு சோதனைச் சாவடியில் சோதனைக்கு உள்படுத்திய போது, காரின் பின்பகுதியில் துப்பாக்கி ரவைகள் இரண்டு மீட்கப்பட்டன என்று இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட இருவர், பளை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
இந்தச் சம்பவம் கடந்த சனிக்கிழமை இடம்பெற்றது.
திருகோணமலையில் நடைபெறும் திருமணச் சடங்கின் பின்னான விருந்துக்கு வாடகைக் கார் ஒன்றைப் பெற்று வல்வெட்டித்துறையைச் சேர்ந்த உறவினர்கள் பயணித்துள்ளனர். கார் தொண்டமனாறு பகுதியில் சோதனையிடப்பட்டு தொடர்ந்து பயணிக்க அனுமதிக்கப்பட்டது.
தொடர்ந்து ஆனையிறவு சோதனைச் சாவடியில் சோதனைக்கு நிறுத்தப்பட்டது. அதன்போது காரை ஓட்டிச் சென்றவர் சோதனைச் சாவடியில் பதிவை மேற்கொள்ளச் சென்ற போது, மஃற்றையவர், சோதனைக்காக காரின் பின்பகுதியைத் திறந்துவிட்டுள்ளார்.
அதன்போது சோதனை செய்த இராணுவச் சிப்பாயால் காரின் பின் பகுதியில் இருந்து துப்பாக்கி ரவைகள் இரண்டு கைப்பற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனால் காரில் பயணித்த இருவரும் கைது செய்யப்பட்டு பளைப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் இருவரும் கிளிநொச்சி நீதிவான் முன்னிலையில் ஞாயிற்றுக்கிழமை முற்படுத்தப்பட்டனர்.
சந்தேகநபர்கள் மீதான குற்றச்சாட்டுத் தொடர்பில் துரித விசாரணையை மேற்கொண்டு உண்மைத் தன்மையைக் கண்டறிய பொலிஸாரை அறிவுறுத்திய நீதிவான், அவர்கள் இருவரையும் நேற்று செவ்வாய்கிழமை வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த்து. சந்தேகநபர்களை பிணையில் விடுவிக்க பொலிஸார் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை. அதனால் சந்தேகநபர்கள் இருவரையும் கிளிநொச்சி நீதிமன்று பிணையில் விடுவித்தது.