சிவபூமி அறக்கட்டளையின் ஆதரவில் அபயம் இலவச மருத்துவ சேவை நிலையம் கடந்த ஞாயிற்றுக்கிழமை(31) பிற்பகல்-04 மணியளவில் யாழ்.ஆனைக்கோட்டை கூழாவடியில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
சிவபூமி அறக்கட்டளையின் தலைவரும், பிரபல ஆன்மீகச் சொற்பொழிவாளருமான செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு. திருமுருகன் தலைமையில் நடைபெற்ற குறித்த நிகழ்வில் விருந்தினர்கள் மலர்மாலைகள் அணிவித்து வரவேற்கப்பட்டனர்.தொடர்ந்து மருத்துவ சேவை நிலையத்திற்கான பெயர்ப் பலகை திரைநீக்கம் செய்து வைக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட இலண்டலிருந்து வருகை தந்த பிரபல வைத்திய நிபுணர் க.பார்த்தீபன் மேற்படி சேவை நிலையத்தை நாடா வெட்டிச் சம்பிரதாயபூர்வமாகத் திறந்து வைத்தார். ஆரம்ப மருத்துவப் பரிசோதனை அமெரிக்காவின் ஹவாய் ஆதீனத்தைச் சேர்ந்த ரிஷி தொண்டுநாத சுவாமிகளுக்கு மேற்கொள்ளப்பட்டது.
தொடர்ந்து மேற்படி சேவை நிலைய முன்றலில் இடம்பெற்ற நிகழ்வில் அமெரிக்காவின் ஹவாய் ஆதீனத்தைச் சேர்ந்த ரிஷி தொண்டுநாத சுவாமிகள், செஞ்சொற் செல்வர் கலாநிதி ஆறு. திருமுருகன், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியகலாநிதி த. சத்தியமூர்த்தி, குழந்தை வைத்திய நிபுணர் எஸ். சிவகுமாரன் ஆகியோர் உரையாற்றினார்கள். பிற்பகல்-05.30 மணி முதல் இரவு- 08 மணி வரை நுரையீரல் சம்பந்தமான வைத்திய நிபுணர் க. பார்த்தீபன் தலைமையிலான விசேட வைத்திய நிபுணர்களால் நோயாளர்களுக்கான இலவச வைத்திய சேவை இடம்பெற்றது.
புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழ்ந்து வரும் வைத்திய நிபுணர்கள், மற்றும் ஏனைய பல்வேறு துறை சார்ந்தவர்கள் இணைந்து அபயம் அறக்கட்டளை எனும் பெயரில் அறக்கட்டளையொன்றை நிறுவியுள்ளார்கள்.
அபயம் அறக்கட்டளையின் பிரதான நோக்கம் கடந்த கால யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மக்களுக்கு இலவச சேவைகளை மேற்கொள்வதேயாகும். இதன் முதற்கட்டமாகவே யாழ்ப்பாணத்தில் அபயம் இலவச மருத்துவ சேவை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ள அபயம் இலவச மருத்துவ சேவை நிலையம் மூலம் வறுமைக் கோட்டுக்குட்பட்ட நோயாளர்களுக்கான இலவச மருத்துவ சேவைகளும், கல்வியை மேம்படுத்துவதற்கான சேவைகளும் பிரதானமாக முன்னெடுக்கப்படவுள்ளன.
வெளிநாட்டு வைத்திய நிபுணர்களுடன் உள்நாட்டு வைத்திய நிபுணர்களும் இணைந்து குறித்த சேவை நிலையம் ஊடாக நோயாளர்களுக்கான இலவச சேவைகளை வழங்கவுள்ளனர்.
இதேவேளை,குறித்த நிகழ்வில் சித்தன்கேணி வீணாகான குருபீட முதல்வர் சிவஸ்ரீ சபா. வாசுதேவக்குருக்கள், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன்,யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும், வாழ்நாள் பேராசிரியருமான பொ.பாலசுந்தரம்பிள்ளை, கோப்பாய் ஆசிரிய பயிற்சிக் கலாசாலையின் பிரதி முதல்வர் ச.லலீசன், யாழ்ப்பாணப் பல்கலைக் கழக ஆங்கிலத் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி- கந்தையா ஸ்ரீகணேசன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வரலாற்றுத் துறைப் பேராசிரியர் கா.கிருஷ்ணகுமார், வலம்புரிப் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் ந.விஜயசுந்தரம், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் வைத்தியநிபுணர் த.பேரானந்தராஜா, தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின் குழந்தை வைத்திய நிபுணர் வைத்தியகலாநிதி நமசிவாயதேசிகர் சரவணபவா, சிவபூமி அறக்கட்டளையின் பொருளாளரும், கண் வைத்திய நிபுணருமான எஸ்.குகதாஸ், தினக்குரல் பத்திரிகையின் ஸ்தாபகரும், பிரபல தொழிலதிபருமான எஸ்.பி. சாமி,யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மற்றும் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைகளின் வைத்திய நிபுணர்கள், மூத்த ஊடகவியலாளர்களான ஊரெழு அ. கனகசூரியர், என்.கே.குலசிங்கம்,பல்துறை சார்ந்தவர்கள், பொதுமக்கள் எனப் பெருமளவானோர் கலந்து கொண்டனர்.