ஆனல்ட்டுக்குத்தான் ஆதரவில்லை, கூட்டமைப்பிற்கு ஆதரவுண்டு- ஈ.பி.டி.பி

யாழ் மாநகரசபையின் முதல்வராக ஆனல்ட் பரிந்துரைக்கப்பட்டால், த.தே.கூட்டமைப்புடன் எந்தவித பேச்சிலும் ஈடுபடுவதில்லையென ஈ.பி.டி.பி முடிவெடுத்துள்ளது. சொலமன் சிறில் முதல்வராக அறிவிக்கப்பட்டால், த.தே.கூட்டமைப்பை ஆதரிப்பதென்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

யாழ் மாநகரசபை முதல்வராக ஆனல்டை நியமிக்க சுமந்திரன் பகிரங்க பிரயத்தனத்தில் ஈடுபட்டுள்ளார். கட்சிக்குள் கணிசமான விமர்சனங்கள் எழுந்துள்ளபோதும், அதைப்பற்றி கவலைப்படாமல், ஆனல்டை முதல்வராக்க முயற்சித்து கொண்டிருக்கிறார். தேர்தல் முடிவுகள் திருப்திகரமாக கிடைக்காத நிலையில், ஆனல்ட்டை முதல்வராக்க வேண்டுமென்பதற்காக, தேர்தல் முடிவு வெளியான கையோடு,ஈ.பி.டி.பி செயளார் டக்ளஸ் தேவானந்தாவை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேச்சு நடத்தினார்.

ஆரம்பத்தில் இதற்கு டக்ளஸ் தேவானந்தாவும் உடன்பாடு கண்டிருந்தார். எனினும், திடீரென கட்சிக்குள் புதிய நெருக்கடியை அவர் சந்தித்தார்.

ஈ.பி.டி.பியின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த ரெமீடியஸ், ஆனல்ட் முதல்வராவதை எதிர்த்தார். ஆனல்டை வட்டாரத்திலேயே தோற்கடிக்க வேண்டுமென ரெமீடியஸ் கடுமையான பிரயத்தனம் செய்திருந்தார். அது முடியாத நிலையில், ஈ.பி.டி.பியின் ஆதரவை நிறுத்தி, ஆனல்ட்டை முதல்வராக்காமல் தடுக்க முயற்சிக்கிறார்.

ஆனல்ட்டும் ரெமீடியசும் மச்சான் முறையான உறவினர்கள்.

ஆனல்ட் முதல்வரானால் அந்த பகுதியில் அவர் பெரும் அரசியல் சக்தியாக மாறிவிடுவார் என்பதால், ஆரம்பத்திலேயே ஆனல்ட்டை வெட்டிவிட ரெமீடியஸ் முயற்சிக்கிறார்.

ஆனால் ஆனல்ட்டை முதல்வராக்க எந்தவிதமான அரசியல் செய்யவும் சுமந்திரன் தயாராக இருப்பதால், ஈ.பி.டி.பியுடன் கடுமையான பேரம்பேசல் நடக்க வாய்ப்பிருக்கிறது.

Related Posts