ஆனந்த சங்கரிக்கு அரசாங்கத்தின் வீடு!

ஜனாதிபதி, பிரதம அமைச்சர், அமைச்சர்கள், நாடாளுமற்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் ஜனாதிபதிகள் ஆகியோருக்கென, கொழும்பில் அமைந்துள்ள உத்தியோகபூர்வ இல்லங்களின் எண்ணிக்கை 57ஆகும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.

நாடாளுமன்றத்தில் நேற்றுப் புதன்கிழமை வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தின் போது, ஜே.வி.பியின் எம்.பியான பிமல் ரத்னாயக்க கேட்டிருந்த கேள்விகளுக்கு தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் நிரோஷன் பெர்ணான்டோ பதிலளித்தார்.

இதன் போதே, தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகமான வீ.ஆனந்த சங்கரிக்கும் உத்தியோகபூர்வ இல்லமொன்று இருக்கும் விவரம் வெளியானது. ஆவர், 2005 மே மாதம் 09ஆம் திகதி முதல், அந்த உத்தியோகபூர்வ இல்லத்தில் வசித்து வருகின்றார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, “உத்தியோகபூர்வ இல்லங்கள் ஒதுக்கப்படும் ஒழுங்கு விதிகள் அல்லது நடைமுறைக்கு அமைவாக தகைமைகளை பூர்த்தி செய்யாது உத்தியோகபூர்வ இல்லங்களில் இருக்கின்ற சந்திரசிறி சூரியராச்சி மற்றும் பிரேமலால் ஜயசேகர ஆகியோருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது” என்றார்.

“இந்த உத்தியோகபூர்வ இல்லங்களில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இரண்டு இல்லங்களும், முன்னாள் ஜனாதிபதி பிரேமதாஸவின் பாரியாரான ஹேமா பிரேமதாஸவுக்கு இல்லமொன்றும் வழங்கப்பட்டுள்ளது” என்றும் அந்தப் பதிலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Posts