ஆந்திரா, தெலங்கானாவில் ஒரே நாளில் 199 பேர் பலி

ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் கொளுத்தும் வெயிலுக்கு ஒரே நாளில் 199 பேர் இறந்துள்ளனர். ஆந்திராவில் இந்த கோடையில் வழக்கத்துக்கு மாறாக வெயில் சுட்டெரிக்கிறது. கடந்த சில ஆண்டுகளை விட இந்தாண்டு கோடையில் அதிக வெப்ப காற்றும், வெப்பமும் பதிவாகி உள்ளது. காலை 7 மணி முதல் சூரியனின் தாக்கம் சுட்டெரிக்க தொடங்கியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதித்துள்ளது. இந்நிலையில் ஆந்திராவில் கடந்த 3 நாட்களில் அதிக வெயில் காரணமாக பலியாவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

india-hotday-sun

கடந்த சனிக்கிழமை 23க்கும் மேற்பட்டவர்களும், ஞாயிற்று கிழமை 66 பேரும் வெயில் கொடுமையால் இறந்தனர். நேற்று முன்தினமும் ஆந்திரா, தெலங்கானா பகுதியில் காலை முதல் மாலை வரை கடுமையான அனல் காற்று வீசியது. இந்த கொடுமையை தாங்க முடியாமல் 199 பேர் பலியாகினர். மேற்கு கோதாவரியில் 37 பேர், கிழக்கு கோதாவரி-16, விசாகப்பட்டினம்-35, விஜயநகரம்-30, ஸ்ரீகாகுளம்- 20, கிருஷ்ணா மாவட்டம்-20, நெல்லூர்-9. குண்டூர்-6, பிரகாசம்-5, சித்தூர்-5, அனந்தபூர்-2, கடப்பா-1, கர்னூல்-1 ஆகியோரும், தெலங்கான மாநிலம் கம்மத்தில் 5 பேரும், கரீம் நகரில் 4 பேரும், மகப்பூர் நகரில் 2 பேரும், ஐதராபாத்தில் ஒருவரும் என மொத்தம் 199 பேர் வெயில் கொடுமை தாங்காமல் உயிரிழந்தனர்.

கடந்த 12ம் தேதி ஆந்திராவில் கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன. ஆனால், அன்று அதிக வெயில் காணப்பட்டதால், கடலோர ஆந்திர பகுதிகளில் உள்ள விசாகப்பட்டினம், மேற்கு கோதாவரி, கிழக்கு கோதாவரி, கிருஷ்ணா, குண்டூர், பிரகாசம் மாவட்டங்களில் 13ம் முதல் 15ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. தொடர்ந்து 16ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டது.

இருந்தாலும் அப்பகுதிகளில் உள்ள வெயில் நிலவரப்படி பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க மாவட்ட கலெக்டர்களுக்கு அதிகாரம் அளித்து அரசு உத்தரவிட்டது. நேற்று காலை முதல் வெயில் கொடுமை அதிகமாக இருந்ததால் ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்ரீகாகுளம் வரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள அரசு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

Related Posts