ஆந்திராவில் எரிவாயு குழாய் வெடித்து 14 பேர் பலி

ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் எரிவாயு கொண்டு செல்லும் குழாய் ஒன்று வெடித்ததில் இதுவரை குறைந்தது 14 பேராவது இறந்துள்ளதாக மூத்த அமைச்சர் தெரிவித்துள்ளார்.

andhranagaramgaspipeline

கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள ‘கெயில்’ என்ற இந்திய எரிவாயு ஆணையத்தின் கட்டடத்தில் உள்ள ஒரு குழாயிலிருந்து தீப்பிழம்புகள் எழுவதை பார்க்க முடிகிறது.

குறைந்தது 15 பேர் வரை படுகாயமடைந்துள்ளனர். விபத்துக்கான காரணம் இன்னும் தெளிவாக தெரியவில்லை.

‘கெயில்’ நிறுவனம் இந்தியாஅரசாங்கத்திற்கு சொந்தமான மிக பெரிய இயற்கை எரிவாயு செயலாக்க மற்றும் விநியோக நிறுவனங்களில் ஒன்றாகும்.

நகரம் கிராமத்தில் இருக்கும் அரசாங்கத்திற்கு சொந்தமான எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு ஆணையத்தின்(ஒ.என்.ஜி.சி) எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனத்திற்கு அருகில் இருக்கும் இந்த நிறுவனத்தின் கட்டிடத்தில் உள்ள 46 செண்டீமீட்டர் அளவிலான குழாயில் இந்த வெடிப்பு ஏற்பட்டுள்ளதாக நிறுவனத்தின் தலைவர் பி.சி. திரிபாதி செய்தி நிறுவனம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.

அத்துடன் விபத்துக்கான காரணங்கள் இன்னும் தெரியவில்லை என்றும் தற்போது மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளில் கவனம் செலுத்தி வருவதாகவும் நிறுவனத்தின் தலைவர் பி.சி. திரிபாதி தெரிவித்துள்ளார்.

இதுவரை விபத்தில் குறைந்தது 14 பேர் இறந்துள்ளதாக ஆந்திர பிரதேசத்தின் உள்துறை அமைச்சர் சின்னப்பா ராஜப்பா தெரிவித்துள்ளார்.

இந்த தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் ஆனால் இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்றும் அம்மாவட்டத்தின் மூத்த அதிகாரி நீது குமாரி பிரசாத் தெரிவித்துள்ளார்.

இந்த மாதம் முன்னதாக சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள இந்தியாவின் மிக பெரிய எஃகு ஆலை ஒன்றில் நடந்த வெடிப்பை தொடர்ந்து ஏற்பட்ட ஒரு விஷ வாயுக் கசிவில் குறைந்தது ஆறு பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts