விடுதலைப் புலிகளின் முன்னாள் முக்கியஸ்தர் எனக் கூறப்படும் ஆதவன் மாஸ்டர் (அய்யாத்துரை மோகன்தாஸ்) பயங்கரவாத விசாரணைப் பிரிவின் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் இந்தியாவுக்கு புறப்பட்டுச் செல்ல தயாரான நிலையில், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
சாவகச்சேரி வீடொன்றில் தற்கொலை அங்கி உட்பட வெடி பொருட்கள் கைப்பற்றப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் இவர் எனவும் சம்பவத்துடன் தொடர்புடைய அணியை இவரே வழி நடத்தியுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது என பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் கூறியுள்ளனர்.
சாவகச்சேரி சம்பவம் தொடர்பில் தகவல்கள் கிடைத்த பின்னர், யாழ்ப்பாணத்தில் உள்ள இந்த சந்தேக நபரின் வீட்டை பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் சோதனையிட்டனர். எனினும் இந்த நபர் அங்கிருந்து தப்பிச் சென்றிருந்தார்.
போர் நடைபெற்ற காலத்தில் மன்னார் மற்றும் வன்னி பிரதேசங்களில் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் தலைவராக செயற்பட்டு வந்த ஆதவன் மாஸ்டர், 2009 ஆம் ஆண்டு போர் முடிவுக்கு வந்த பின்னர் இராணுவத்தினரிடம் சரணடைந்தார். சுமார் ஒன்றரை மாதம் புனர்வாழ்வு முகாமில் இருந்த இவரை பின்னர், இராணுவ புலனாய்வுப் பிரிவினர் தமது பொறுப்பில் எடுத்துக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.