ஆணைக்குழு அறிக்கைக்கு எதிராக வழக்கு தொடரப்போகிறேன்- டக்ளஸ் தேவானந்தா

கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கைக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்போவதாக அமைச்சரும் ஈ.பி.டி.பியின் பொதுச் செயலாளருமான டக்ளஸ் தேவானந்தா கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த செவ்வி இவ்வாறு தெரிவித்துள்ளார்.வடக்கில் ஆட்கடத்தல்களில் ஈ.பி.டி.பி ஈடுபட்டதாக நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதற்கு எதிராகவே தாம் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப் போவதாக டக்ளஸ் தேவானந்தா குறிப்பிட்டுள்ளார்.

இந்தக் குற்றச்சாட்டு தனது பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் என்பதால் நீதிமன்றம் செல்லப் போவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதன் பின்னணியில் ஒரு உள்நோக்கம் இருப்பதாகவும் ஆணைக்குழுவின் அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னதாக ஏன் குறிப்பிட்ட சில ஊடகங்களில் ஆணைக்குழுவின் அறிக்கை பற்றிய சில தகவல்கள் கசிந்தது? என்றும் டக்ளஸ் தேவானந்தா கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆணைக்குழுவின் ஏனைய பரிந்துரைகளை ஆதரிக்கின்ற அதேவேளை, ஈ.பி.டி.பிக்கு எதிரான குற்றச்சாட்டுக்கு எதிராகவே நீதிமன்றில் வழக்கு தொடரப்போவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆணைக்குழு முன் சமர்ப்பித்த எனது சாட்சியத்தைக் கூட அறிக்கையில் தவறாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது என்றும் அறிக்கையில் மொழிபெயர்ப்புத் தவறுகள் அதிகம் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Posts