நாடுமுழுவதிலுமுள்ள முச்சக்கர வண்டி உரிமையாளர்களுக்கும் அதன் சாரதிகளுக்கும் காப்புறுதி நஷ்டஈடு கிடைக்கும் வகையில் ஓய்வூதியத்துடன் கூடிய சமூக பாதுகாப்பு காப்புறுதி முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என சிரேஷ்ட அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாசவின் வாய்மொழி மூல கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் சரத் அமுனுகம இத்தகவலை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் :-
மாவட்ட மட்டத்தில் முச்சக்கர வண்டிகளின் விபரங்களை திரட்டியே இத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் 18 வயதுக்கும் 59 வயதுக்கும் இடைப்பட்ட சேமிப்பு திட்டத்தின் கீழ் அங்கத்துவம் பெறும் சகல முச்சக்கர வண்டி உரிமையாளர்களுக்கும் அதன் சாரதிகளுக்கும் அவர்களுக்கு 60 வயதாகும் தினத்திலிருந்து வாழ்நாள் முழுவதுமான மாதாந்த ஓய்வூதிய கொடுப்பனவு வழங்கப்படுமென்றும் இதன் போது அங்கத்தவர்கள் தாம் விரும்பும் ஓய்வூதியத் தொகையை தீர்மானிக்க முடியும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இந்த நடவடிக்கையானது மாவட்ட செயலகங்கள் பிரதேச செயலகங்களுடாக தேசிய முச்சக்கர வண்டி தொழில் சங்க சம்மேளனத்தின் ஒத்துழைப்புடன் நாடளாவிய ரீதியில் இதனை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.