ஆட்டோ ஓட்டுவதில் உலக சாதனை !! (வீடியோ இணைப்பு)

இரண்டு சக்கரங்களில் ஆட்டோரிக்ஷாவை அதிக தூரம் ஓட்டி சென்று உலக சாதனை படைத்த சென்னையை சேர்ந்த ஜெகதீசனின் பெயர் 2016ம் ஆண்டு கின்னஸ் புத்தக பிரதியில் இடம்பெற இருக்கிறது.

auto-ecord-jagatheesan-1

மும்பையில், நடந்த இதற்கான நிகழ்ச்சியில் கின்னஸ் சாதனைக்காக நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச அளவை காட்டிலும், இரு மடங்கு கூடுதல் தூரத்தை அவர் கடந்து அனைவரையும் வியக்க வைத்திருக்கிறார். அவரை பற்றியும், அவரது சாதனை பற்றியும் கூடுதல் தகவல்களை காணலாம்.

சென்னையை சேர்ந்த ஜெகதீசன் [27]ஆட்டோரிக்ஷா ஓட்டுனராக இருக்கிறார். சிறு வயது முதலே பைக் ஸ்டன்ட் செய்வதில் ஆர்வம் இருந்துள்ளது. இந்தநிலையில், ஆட்டோ ஓட்டுனராக மாறிய பின், ஆட்டோரிக்ஷாவிலும் தனது சாகச வித்தையை பயிற்சி செய்திருக்கிறார்.

auto-ecord-jagatheesan-2

பகலில் பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் என்பதால், இரவு நேரங்களில் மட்டும் ஆட்டோரிக்ஷாவை இரண்டு சக்கரங்களில் செலுத்தி பயிற்சி செய்திருக்கிறார்.

பல ஆண்டுகள் கடின பயிற்சிக்கு பின் இந்த உலக சாதனையை படைத்திருக்கிறார்.

மணிக்கு 80 கிமீ வேகத்தில் ஆட்டோரிக்ஷாவை செலுத்தி இவ்வாறு சாகசம் செய்வதாகவும், ஸ்டீயரிங் கன்ட்ரோலில்தான் இந்த வித்தைக்கான சூட்சுமம் இருப்பதாகவும் பெருமிதம் தெரிவிக்கிறார்.

இந்தநிலையில், தனது திறமையை கின்னஸ் சாதனை புத்தகத்தின் இந்திய அமைப்பாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.

auto-ecord-jagatheesan-3

இதையடுத்து, கடந்த 2011ம் ஆண்டு பிப்ரவரி 17ந் தேதி மும்பை, ஜூகு பகுதியிலுள்ள விமான ஓடுதளத்தில் கின்னஸ் அதிகாரிகள் முன்பு அவர் தனது சாதனையை நிகழ்த்தி காட்டி அசத்தினார்.

குறைந்தது ஒரு கிலோமீட்டர் தூரம் ஆட்டோ ரிக்ஷாவை இரண்டு சக்கரங்களில் செலுத்த வேண்டும். இடையில் ஒருமுறை கூட கீழே இறங்காமல், இரண்டு சக்கரங்களில் மட்டுமே முழுவதுமாக ஓட்ட வேண்டும் என்று கின்னஸ் சாதனை அமைப்பின் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்சமான ஒரு கிலோமீட்டர் தூரத்தைவிட, இரு மடங்கு தூரத்திற்கு தனது ஆட்டோரிக்ஷாவை இரண்டு சக்கரங்களில் செலுத்தியிருக்கிறார்.

அவர் 2.2 கிலோமீட்டர் தூரம் வெறும் இரண்டு சக்கரங்களில் ஆட்டோரிக்ஷாவை செலுத்தி, புதிய உலக சாதனை படைத்தார். இது கின்னஸ் நிர்வாகிகளையே அசர வைத்திருக்கிறது.

நான்காண்டுகளுக்கு முன்பு அவர் சாதனை படைத்துவிட்டாலும், முதல்முறையாக அவரது பெயர் 2016ம் ஆண்டு கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெகதீசன் சாதனை படைத்த வீடியோவை ஸ்லைடில் காணலாம்

வீடியோ காட்சிகளில் சில இடங்களில் பொது சாலைகளில் ஆட்டோரிக்ஷா சாகசம் நடைபெறுவதாக அமைந்துள்ளது. அதனை டிரைவ்ஸ்பார்க் தளம் ஊக்குவிக்கவில்லை என்பதை தெரிவிக்கிறோம். பொது சாலைகளில் இதுபோன்ற சாகசங்களை செய்வதை கண்டிப்பாக தவிர்க்குமாறு டிரைவ்ஸ்பார்க் தளம் கேட்டுக்கொள்கிறது.

Related Posts