யாழ். மாநகர சபை எல்லைக்கு உட்பட்ட முச்சக்கர வண்டிகளுக்கு ஸ்ரிக்கர் ஒட்டும் நிகழ்வு இன்று யாழ். மணிக்கூட்டுக் கோபுரத்திற்கு அருகில் இடம்பெறவுள்ளதாக யாழ்.மாவட்ட முச்சக்கரவண்டி சங்கத்தின் தலைவர் ராஜ்குமார் தெரிவித்தார்.
யாழ்.மாநகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் முச்சக்கர வண்டிகளை சேவையில் ஈடுபடுத்துபவர்கள் கட்டாயமாக குறித்த ஸ்ரிக்கரை ஒட்டியிருக்க வேண்டும் இல்லையேல் முச்சக்கர வண்டிகள் நிறுத்தும் இடங்களிலோ அல்லது சேவையில் ஈடுபட முடியாது என்றும் யாழ். மாநகர சபை அறிவித்திருந்தது.
அதன் அடிப்படையிலேயே மீட்டர் பூட்டிய முச்சக்கர வண்டிகளுக்கு மாத்திரம் ஒட்டுவதற்கு இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தலைவர் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
யாழ். மாவட்டத்தில் 700 மேற்பட்ட முச்சக்கர வண்டிகள் சேவையில் ஈடுபடுத்தப்படுகின்றன. எனினும் இதுவரை 50 முச்சக்கர வண்டிகள் மாத்திரம் பதிவு செய்யப்பட்டு மீட்டர் பொருத்தப்பட்டு சேவையில் ஈடுபடுகின்றன.
இதில் பட்டிணப்பகுதிக்குள் உள்ள மீட்டர் பொருத்தப்பட்டுள்ள 50 வரையான முச்சக்கர வண்டிகளுக்கே இன்று மாநகர சபை ரிஸ்ரிக்கர் ஒட்டப்படவுள்ளது.
அத்துடன் பதிவு செய்யப்பட்ட முச்சக்கர வண்டிகளுக்கு விசேட அடையாள அட்டையும் வழங்கப்பட்டு வருகின்றது.
எனவே பதிவினை மேற்கொண்டு மீட்டர் பொருத்தாத முச்சக்கர வண்டிகளுக்கு மாநகர சபையின் ஸ்ரிக்கர் ஒட்ட முடியாது. அதனால் அவர்கள் சேவையில் ஈடுபட முடியாது. எனவே பதிவுகளை மேற்கொள்ளாதவர்கள் பதிவுகளை மேற்கொள்ளுமாறும் அவர் மேலும் தெரிவித்தார்.