இலங்கை இராணுத்தில் தமிழ், இளைஞர் யுவதிகளை இணையுமாறு அழைப்பு விடுவது படைத் தளபதிகளின் வேலையில்லை. அவர்களின் பதவி நிலைகளுக்கு அப்பாற்பட்ட வேலையை அவர்கள் செய்து வருகின்றார்கள். இவ்வாறான அழைப்புக்கு தமிழ் சமுதாயம் எடுபட்டுவிடக்கூடாது’ என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
யாழ்பாணத்தில் உள்ள தமிழ், இளைஞர் யுவதிகளை படையில் இணைந்துகொள்ளுமாறு யாழ் கட்டளைத்தளபதி அழைப்பு விடுத்துள்ளமை தொடர்பில் அவரிடம் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது குறித்து சுரேஸ் பிரேமசந்திரன் எம்.பி மேலும் கூறியதாவது,
‘இராணுவத்திற்கு ஆளணித் தேவையை பூர்த்தி செய்யவேண்டும் என்றால் வர்த்தமானி அறிவித்தல் மூலமே ஆட்சேர்ப்பு செய்யவேண்டும். இங்கு சட்டதிட்டங்களுக்கு முரணான வகையில் வீடு வீடாகச் சென்றும் ஒலிபெருக்கி மூலமும் படையில் சேர்க்கும் நடடிவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான செயற்பாடுகளில் கிளிநொச்சி மற்றும் யாழ் படைத்தளபதிகள் ஈடுபட்டுள்ளனர்.
கிளிநொச்சி மற்றும் யாழ் படைத்தளதிகள் தமது நிலையைக் கடந்து இவ்வாறான செயற்பாடுகளை மேற்கொண்டு வருவதானது வடபகுதி முழுவதும் இராணுவ ஆதிக்கத்தை நிலைநாட்டிக்கொள்ளும் ஒரு செயற்பாடாகவே அமைந்துள்ளது.
வடபகுதியில் 18ற்கும் மேற்பட்ட படைப்பிரிவுகள் செயற்பட்டு வருகின்றன. வடபகுதிகளில் படைக்குறைப்பை மேற்கொள்ளுமாறு அமெரிக்கா, இந்தியா மற்றும் ஐ.நா ஆகியன தெரிவித்து வரும் நிலையில் வடபகுதியில் படைக்குறைப்பு மேற்கொள்ளப்பட்டதாக தெரியவில்லை.
அத்துடன் சர்வதேச நாடுகளில் போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டால் ஆளணி மற்றும் அதன் வளங்கள் யாவும் குறைக்கப்படுவது வழக்கம். ஆனால் இங்கு போர் முடிந்து மூன்று வருடங்களைக் கடந்த நிலையிலும் ஆளணி மற்றும் பாதுகாப்புச் செலவீனங்கள் அதிகரித்துச் செல்வது ஒரு வேடிக்கையானதாக அமைந்துள்ளது.
ஒரு நாட்டின் இராணுவத்திற்கு அந்தந்த மாவட்டத்தில் கடமையாற்றும் கட்டளைத் தளபதிகள் இராணுவத்திற்கு ஆட்களை இணைத்துக்கொள்ளலாம் என்றால் ஆசிரியர் பற்றாக்குறையாக உள்ள பகுதிகளுக்கு அங்குள்ள திணைக்களத் தலைவர்கள் ஏன் ஆசிரியர்களை நியமிக்க முடியாது?
படைத் தளபதியின் இந்த அழைப்பை தமிழ் தேசியக் கூட்மைப்பு வன்மையாக கண்டிப்பதுடன் இவ்வாறான அழைப்புக்கு தமிழ் சமுதாயம் எடுபட்டுவிடக் கூடாது’ என்றார்.