ஆட்சி மாற்றம் தமிழ் மக்களின் அன்றாடப் பிரச்சினைகளுக்குக் கூடத் தீர்வைத் தராது!

ஆட்சி மாற்றமானது தமிழ் மக்கள் அன்றாடம் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குக் கூட தீர்வைத் தராது எனத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, எந்த ஜனாதிபதி வேட்பாளராவது தாம் ஆட்சிக்கு வந்தால் பிரச்சினைகளுக்குத் தீர்வைப் பெற்றுக்கொடுப்போம் என உறுதிமொழி வழங்க முன்வருவார்களா எனவும் கேள்வியெழுப்பியுள்ளது.

suresh

அத்துடன் இராமன் ஆண்டால் என்ன இராவணன் ஆண்டால் என்ன என்னும் எண்ணம் ஏற்படுமளவிற்கு யுத்தத்திற்குப் பின்னர் தமிழர்கள் வெகுவாக பாதிப்படைந்து விட்டார்கள். ஓநாய்களுக்கு மத்தியில் ஆடுகள் வாழமுடியாது. அதுதான் தமிழ் மக்களின் இன்றைய நிலைமை எனவும் கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் மக்கள் கண்காணிப்புக் குழுவின் இணை ஸ்தாபகருமான மாமனிதர் நடராஜா ரவிராஜின் 8ஆம் ஆண்டு நினைவுப் பேருரைக் கூட்டம் கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் நேற்று நடைபெற்றது. ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும் ஏற்பாட்டாளருமான மனோ கணேசன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் தலைவருமான மாவை. சேனாதிராஜாவும், கௌரவ அதிதியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரனும், சிறப்பு அதிதியாக மக்கள் கண்காணிப்புக்குழுவின் தலைவரும் ஐக்கிய சமவுடமைக்கட்சியின் தலைவருமான சிறிதுங்க ஜயசூரியவும் பங்கேற்றனர்.

ஜனநாயக மக்கள் முன்னணியின் உப செயலாளரும் மேல் மாகாணசபையின் உறுப்பினருமான சண்.குகவரதன் பொருளுரையாற்றியதுடன் ஜனநாயக மக்க்ள முன்னணியின் கொழும்பு மாநாகர சபை உறுப்பினர்களான சி.பாஸ்கரா வரவேற்புரையையும், வேலணை வேணியன் நன்றியுரையையும் ஆற்றினர். அத்துடன் இந்நிகழ்வில் வடக்கு மாகாணசபையின் உறுப்பினர்களான அனந்தி சசிதரன், எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் கொழும்பு மாநகர சபை உறுப்பினர்கள் உட்படப் பலர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் உரையாற்றுகையிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தனது உரையில் மேலும் தெரிவித்தவை வருமாறு:

நண்பன் ரவிராஜுடன் இணைந்து பணியாற்றியமை, இறுதியாக கொழும்பிலிருந்து சாவகச்சேரிக்குச் சென்று அவரின் மரணச்சடங்கில் பங்கேற்றமை வரை அனைத்துமே என் மனக்கண் முன்னால் நிற்கின்றது. ஓர் இளைஞராக – இருபிள்ளையின் தந்தையாக – கடும் உழைப்பாளியாக – தமிழ் மக்களுக்கு சேவை செய்யக்கூடியவராக ரவிராஜ் இருந்தார்.

நெருக்கடி மிக்க சூழில் தமிழ் மக்களின் பிரச்சினைகளை சிங்கள மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்கு அப்பால் வெள்ளைவானில் கடத்தப்பட்ட பலநூறு மக்களின் உறவுகளின் கண்ணீரைத் துடைப்பதற்காக அரும்பாடுபட்டார். மக்களின் ஒவ்வொரு துன்பத்திலும் அவரது பங்களிப்புக் காணப்பட்டது.

அவ்வாறிருக்க எதிர்க்கட்சிகள் எதனைச் செய்தாலும் இந்த அரசால் ஜீரணிக்கமுடிவதில்லை. யுத்தம் நிறைவடைந்த நிலையில் இப்பொழுது பல இளைஞர்கள் கைதுசெய்யப்படுகின்றார்கள். லக்ஷ்மன் கதிர்காமர், அநுராதபுரத்தில் பணியாற்றிய பிரிகேடியர் போன்றவர்கள் உட்பட வெவ்வேறு சந்தர்ப்பங்களில் கொலை செய்யப்பட்டார்கள் என்பதற்காக இன்று தமிழ் இளைஞர்கள் கைதுசெய்யப்படுகின்றார்கள். ஆனால், நாடாளுமன்ற உறுப்பினர்களான ரவிராஜ், ஜோசப் பரராஜசிங்கம், மகேஸ்வரன் ஆகியோர் உட்பட தமிழ் முக்கியஸ்தர்கள் கொலை செய்யப்பட்டமைக்காக அரசு திருப்திகரமான பதிலளிக்காததுடன் அதற்காக யாரையும் கைதுசெய்யவில்லை.

காங்கேசன்துறையில் இராணுவத்தினருக்கு ஊடகப்பயிற்சி நடைபெறுகின்றது. இரண்டு நாள்களுக்கு முன்னதாக யாழ்.பொது நூலகத்தில் மாணவர்களுக்கு இராணுவத்தால் ஊடகப்பயிற்சி வழங்கப்படுகின்றது. ஆனால், கொழும்பில் தமிழ் ஊடகவியலாளர்களுக்கு பயிற்சியளிக்க முற்பட்டபோது அதனைத் தடுத்து நிறுத்தினார்கள். திருகோணமலையில் ஓர் இராணுவக் கண்காட்சியை நடத்த இருக்கின்றார்கள். இவற்றை ஏன் செய்கின்றார்கள் என்று கேள்வியெழுப்பினால் இராணுவம் மக்களுடன் நெருங்கிப் பழகுகின்றதாம். நாங்கள் எதனை நோக்கிப்போய்க் கொண்டிருக்கின்றோம். இராணுவம் மக்களுடன் நெருங்கிப் போய் எதனைச் செய்ய முயல்கின்றது. நாட்டில் நடைபெறும் எந்த விடயங்களுமே ஆரோக்கியமானதாக இல்லை.

ஜனாதிபதித் தேர்தல் நடைபெறப்போவதாக கூறுகின்றார்கள். இந்தத் தேர்தலில் மஹிந்த ராஜபக்‌ஷ தோல்வியடைவதென்பது அவருடைய குடும்பத்தின் தோல்வியாகும். நாட்டில் அவர்கள் செய்திருக்கும் ஜனநாயக விரோதச் செயற்பாடுகளும், அடாவடித்தனங்களும் அவர்களை எங்கு கொண்டுசென்று நிறுத்தும். ஆகவே இந்தத் தேர்தலை சதாரணமாக கருதாதீர்கள்.அதேபோன்று இவர்களின் செயற்பாடுகளின் பிரகாரம் ஜனநாயக முறையில் சாதாரண தேர்தலொன்று நடைபெறும் என எதிர்பார்க்க முடியாது.

நீங்கள் எமக்கு சாதகமாக எதனையுமே செய்யவில்லை. வெளிநாட்டிலும்,உள்நாட்டிலும் எமக்கு சாதகமாக இல்லை. இந்தத் தேர்தலிலாவது எமக்குச் சாதகமாக இருங்கள். சாதகமாக இருந்தால் உங்களுடைய பிரச்சினைகளை தீர்ப்பது தொடர்பாக ஆலோசனை செய்யலாம் என அமைச்சர் பஸில் ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

எமது உரிமைகளைப் பெறுவதற்காக நாம் இவர்களிடம் பிச்சை கேட்கவேண்டும். 2014ஆம் ஆண்டும் ஆமாம் என தலையாட்டித்தான் அனைத்தையும் செய்யவேண்டுமென்றால் எவ்வாறான நிலைமையைத் தற்போது வைத்திருக்கின்றார்கள் எனப் புலப்படுகின்றதல்வா? சுயநிர்ணம் என்பது யாரலும் மறுக்கமுடியாது. இந்த மண்ணில் சிங்கள மக்களுக்குள்ள அதே உரிமையைத் தான் நாம் கேட்கின்றோம். வேறு எதனையும் கேட்கவில்லை. எமது உரிமைகளைப் பெறுவதற்காக எம்மவர்கள் உயிர்களைத் தியாகம் செய்திருக்கின்றார்கள். ரவிராஜ் யாரும் கொடுக்க முடியாத விலையை கொடுத்திருக்கின்றார்.

ஆகவே, எந்தவொரு பேச்சும் சர்வதேசத்தின் முன்னாள் நடைபெறவேண்டும் என்பதில் நாம் உறுதியாக இருக்கவேண்டும். 2011ஆம் ஆண்டு முதல் 2013வரை 18 சுற்று பேச்சுக்களை நடத்தி எதுவுமே ஆகாத நிலையில் இன்று தேர்தல் வரும் வேளையில் எம்மைப் பற்றிப் பேச்சுக்கு அழைக்கும் சூழல் காணப்படுகின்றது.

நாம் அஹிம்சை, ஆயுத முறையில் போராடி இன்றும் போராடிக்கொண்டுதான் இருக்கின்றோம். இன்று பொதுவேட்பாளர் தொடர்பாக பேசுகின்றார்கள். ரணில், சந்திரிக்கா, கரு என யாராக இருக்கட்டும். எந்த வேட்பாளராவது தமிழ் மக்கள் நிச்சயமாக பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள். முகாம்களில் இருக்கின்றார்கள். நான் பதவிக்கு வந்தால் அவர்கள் மீள்குடியேற்றப்படுவார்கள், இராணுவம் வெளியேற்றப்படும் என நாம் கோராமலேயே கூறுவதற்குத் தயாராக இருக்கின்றார்களா? இது ஓர் அடிப்படை மனித உரிமை விடயம். இவர்களில் யாராவது முன்வந்து உறுதிமொழிகளை தருவார்களா? எம்மைப் பொறுத்தவரையில் நாம் பல தேர்தல்களை, ஜனாதிபதிகளை பார்த்துவிட்டோம். ஆகவே, வரப்போகும் ஜனாதிபதித் தேர்தல் கூட நாம் விரும்பியோ விரும்பாமலோ முடிவெடுக்கும் சூழலுக்குத் தள்ளப்படலாம். ஆனால், ஆட்சி மாற்றம் என்பது தமிழ் மக்களின் அன்றாடம் இருக்கும் பிரச்சினைகளுக்குக் கூட தீர்வை வழங்காது.

அவ்வாறான நிலைமையில் இராமன் ஆண்டால் என்ன இராவணன் ஆண்டால் என்ன என்னும் எண்ணம் ஏற்படுமளவிற்கு யுத்தத்திற்கு பின்னர் நாம் வெகுவாக பாதிப்படைந்து விட்டோம். ஓநாய்களுக்கு மத்தியில் ஆடுகள் வாழமுடியாது. அதுதான் தமிழ் மக்களின் இன்றைய நிலைமை. – என்றார்.

Related Posts