ஆட்சி மாறியது எப்படி? இறுதிநேரம் இராணுவம் இயங்க மறுத்தது !

ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால வெற்றி பெற்றதும், எந்த சந்தடியுமின்றி எப்படி அவர் ஜனாதிபதியானார் என்பது அனைவரையும் வியப்படைய வைத்துள்ளது. அதிகாலையிலேயே, முழுமையான தேர்தல் முடிவுகளும் அறிவிக்கப்பட முன்னரே முன்னாள் ஜனாதிபதி அலரி மாளிகையிலிருந்து மூட்டை முடிச்சுக்களுடன் வெளியேறியிருந்தார். இது அவரது பெருந்தன்மையை காண்பிப்பதாக பலரும் கூறிக் கொள்கிறார்கள். ஆனால் உண்மை அதுவல்ல, இவற்றின் பின்னணியில் பெரும் அதிர்ச்சிக்கதைகள் புதைந்துள்ளன என்பதை இப்பொழுது வெளிவரத் தொடங்கியுள்ள தகவல்கள் உறுதி செய்கின்றன.

முதலில் ஒன்றை நினைவூட்டலாம். மகிந்த அலரி மாளிகையிலிருந்து வெளியேறுவதாக அறிவித்த நேரம் காலை 6.30. அந்த சமயத்தில் அவர் மைத்திரியை விட வெறும் ஒரு இலட்சம் வாக்குகள்தான் பின்தங்கியிருந்தார். அறிவிக்கப்பட்டதெல்லாம் மகிந்தவிற்கு எதிரான மாவட்டங்கள். முக்கியமாக வடக்கு, கிழக்கு. மகிந்தவின் கோட்டைகளும், பெரிய மாவட்டங்களும் அறிவிக்கப்படாமல் இருந்தன. நிலைமை இப்படியிருக்க, ஒரு இலட்சம் வாக்கு வித்தியாசமென்பது, அவர் ஹம்பாந்தோட்டையால் மட்டமே ஈடுகட்ட கூடிய வித்தியாசம். அது தவிர, அவரது கோட்டைகள், மொனராகலை, கேகாலை, குருணாகல், இரத்தினபுரி, மாத்தறை என பெரிய மாவட்டங்கள் இருந்தன. அப்படியிருக்க அவர் ஏன் அப்பொழுதே வெளியேறினார்? லொஜிக் இடிக்கவில்லையா.

விடயம் அங்கேதான் இருக்கிறது. தேர்தல்கள் திணைக்கள அதிகாரிகள், ஐதேக உயர்மட்ட தலைவர்கள், நொந்து நூடில்சாகி உள்ள அரச தரப்பினர், கொழும்பில் உள்ள இராஜதந்திர வட்டாரங்கள் என எல்லோருடனும் பேசியதில் சில தகவல்கள் வெளியாகியுள்ளன. அவற்றை கூட்டி ஒரு வரிசைப்படுத்தியபோது, அனைத்தும் ஒரு திசையிலேயே பயணித்தன. அந்த தகவல்களை உங்களிற்கு சொல்கிறோம்.

உண்மையில் அதிகாலைக்கு முன்னரே பெரும்பாலான முடிவுகள் எண்ணப்பட்டு விட்டன. அப்பொழுதே ஆட்சிமாற்றம் உறுதியாகிவிட்டது. எனினும், இந்த தேர்தல் அந்தரத்தில் நடக்கும் வித்தைக்காரனின் அலுவல் என்பதை தேர்தல்கள் ஆணையாளர் தெரிந்தே வைத்திருக்கிறார். அதனால், அவர் மிக நிதானமாக காரியம் ஆற்ற முனைந்துள்ளார். முடிவுகளை விடியும் வரை தாமதப்படுத்தினால், கலவரங்கள் மற்றும் விபரீதங்களை தடுக்கலாமென அவர் நினைத்தார்.

இந்த சமயத்தில் ஜனாதிபதி செயலகத்திலிருந்து தேர்தல் ஆணையாளரை அடிக்கடி தொடர்பு கொண்டபடியிருந்தனர். ஆரம்பத்தில், சற்று பொறுங்கள், பொறுங்கள் என ஆணையாளர் கூறிக் கொண்டிருந்தார். எனினும், அழும் குழந்தையை எத்தனை நேரத்தான் சமாளிப்பது, அவர்கள் பொறுமையிழக்க தொடங்கிவிட்டார்கள். இனி நிலைமை கட்டுமீறும் என்பதை தேர்தல்கள் ஆணையாளர் புரிந்து கொண்டு விட்டார்.

இந்த சமயத்தில்- நள்ளிரவுக்கு சற்று முன்னதாக ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரியவை தொடர்பு கொண்டுள்ளார். அப்பொழுது ஜனாதிபதியின் நிலைமை விபரீதமாக உள்ளதை தேர்தல்கள் ஆணையளார் கூறியுள்ளார். “ஏதாவது செய்ய முடியுமா” என ஜனாதிபதியின் செயலாளர் பதில் கேள்வி கேட்டிருக்கிறார். “ஏதாவது என்று.. என்ன அர்த்தத்தில் கூறுகிறீர்கள்” என தேர்தல் ஆணையாளர் பதில் கேள்வி கேட்க, லலித் இப்படி பதிலளித்திருக்கிறார். “உங்களிடம் நான் நேரடியாக கேட்கிறேன். ஜனாதிபதியை எப்படியாவது வெற்றியடைய வைக்க முடியுமா?. நாம் எதையாவது செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கிறோம்”

தேர்தல்கள் ஆணையாளர், தான் சுயாதீனமாக செயற்பட வேண்டியதை நினைவூட்டிவிட்டு, அவரை சிறிது நேரத்தின் பின்னர் தொடர்பு கொள்வதாக கூறியிருக்கிறார். இந்த இழுபறியையடுத்து, தனது அதிகாரிகளுடன் தேர்தல்கள் ஆணையாளர் அவசரமாக கலந்துரையாடியிருக்கிறார். அவசரமாக எந்த முடிவும் எடுக்காமல், எதிர்க்கட்சிகளுடனும் விடயத்தை கலந்துரையாடுவதென அவர்கள் முடிவு செய்தனர். நள்ளிரவிலேயே தேர்தல்கள் செயலக அதிகாரியொருவர் ரணில் விக்கிரமசிங்கவிடம் விடயத்தை கூறியிருக்கிறார்.

தேர்தல் பரபரப்பில் கொழும்பில் ரணிலுடன் ஒன்றுகூடியிருந்த எதிரணித்தலைவர்கள் சிலர் உடனடியாக சந்திரிகாவை தம்மிடம் வருமாறு அவசரமாக அழைப்பு விடுத்தனர். அடுத்த சிறிதுநேரத்திலேயே அங்கு ஆஜரான சந்திரிகாவுடன் அவர்கள் நடந்திய ஆலோசனையின் முடிவில், மேற்கு நாடுகளின் உதவியை நாடுவதென முடிவு செய்தனர்.

இலங்கையின் ஆட்சிமாற்றத்தில் மேற்குநாடுகள் காட்டிவரும் அக்கறை எல்லோருக்கும் தெரிந்ததுதான். பொதுஎதிரணியின் வெற்றிக்காக அவர்கள் காத்திருந்தார்கள். இவர்களுடன் இன்னொரு தரப்பாக இந்தியாவும் காத்திருந்தது. சந்திரிகா மற்றும் ரணில் இந்தியா மற்றும் அமெரிக்காவுடன் தொடர்புகளை ஏற்படுத்திய சமநேரத்தில், மற்றத் தலைவர்கள் கொழும்பில் உள்ள இராஜதந்திரிகளுடன் தொடர்பை ஏற்படுத்தினார்கள்.

மேற்குநாடுகளுடன் மல்லுக்கு நின்றதை மகிந்த ராஜபக்ச அன்றைய இரவில் உணர்ந்திருக்க கூடும். சந்திரிகாவின் அழைப்பின் தாக்கம், அடுத்த சில நிமிடங்களில், மகிந்தவை தாக்கியது. அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஜோன் கெரி, மகிந்த ராஜபக்சவுடன் நேரடியாக தொடர்பு கொண்டு பேசினார். அவர் பேசிய விடயங்கள் வெளியில் வரவில்லை. எனினும், எதிரணி தலைவர்களின் கருத்துப்படி, ஜனநாயக தீர்ப்பை ஏற்று ஆட்சியிலிருந்து இறங்க மறுத்தால் நாம் நேரடியாக தலையிடுவோம். இது போர்க்குற்ற விசாரணையை போன்ற சமாச்சாரமல்ல. இந்த பிடியை வைத்தே எம்மால் நேரடியாக களமிறங்க முடியும் என்பதே கெரியின் கருத்தின் சாரமாக இருந்தது.

மறுவளமாக, அண்டைநாடான இந்தியாவும் அழுத்தங்கள் கொடுத்தது. சௌத்புளக் உயரதிகாரியொருவர், லலித் வீரதுங்கவை தொடர்பு கொண்டு, மக்களின் தீர்ப்பை ஏற்க மறுத்தால், நாங்கள் நேரடியாக தலையிடவும் வேண்டி வரலாம். யாரும் சுலபமாக களமிறங்க தமிழர் விவகாரத்தையும் கையிலெடுக்கலாம் என கூறியுள்ளார்.

அதேவேளை, அமெரிக்க ஒரு மிரட்டலுடன் சும்மா இருந்துவிடவில்லை. எங்கே செக் அடிக்க வேண்டுமோ அங்கே அடித்தது. கொழும்பிலுள்ள அமெரிக்க தூதர் உடனடியாகவே தேர்தல்கள் ஆணையாளரை தொலைபேசியில் தொடர்பு கொண்டார். வெள்ளைமாளிகை, சௌத்புளக் மிரட்டல்களை கூட்டி மொத்தமாக தேர்தல் ஆணையாளரிடம் கொட்டிவிட்டார்.

ஆட்சி மாற்றத்திற்கு தேர்தல் முடிவு வழிகோலுமாக இருந்தால், அதனை தயக்கமில்லாமல் அறிவிக்குமாறும், அதன் பின்னர் எந்த பிரச்சனையுமில்லாமல் அமெரிக்கா காப்பாற்றும் என வாக்களித்தார். மக்களின் தீர்ப்பு ஆட்சிமாற்றமெனில், அதனை மகிந்த ராஜபக்சவை செவிமடுக்க வைக்க தம்மால் முடியும், ஆகவே தயங்க வேண்டாம். மக்களின் முடிவை துஸ்பிரயோகம் செய்தால் நீங்களும் பொறுப்பு கூற வேண்டி வரலாம் என மெல்லிய மிரட்டலும் விடுத்துள்ளார்.

இதற்குள் ஜனாதிபதி தரப்பில் மந்திராலோசனை நடந்ததில், அவர்களால் எந்த முடிவும் எடுக்க முடியாமல் இருந்தது. ஜனாதிபதியின் சகோதரர் கோத்தபாய இந்த கூட்டங்களில் எதையும் பேசாமல் கடுமையான முகத்துடன் இருந்திருக்கிநார். அவரது மனவோட்டத்தை யாராலும் புரிந்து கொள்ள முடியவில்லை.

எப்பொழுதும் மேற்குடன் மல்லுக்கு நிற்கும் கோத்தபாய அலரிமாளிகையிலிருந்து வெளியில் வந்ததும், ஒரு அதிர்ச்சி முடிவெடுத்துள்ளார். அதாவது இராணுவத்தை பயன்படுத்துவது. அவர் இந்த திட்டத்துடன் ஒரு குறிப்பிட்ட இராணுவ படையணியை கொழும்பில் தயார் நிலையிலும் வைத்திருந்திருக்கிறார்.

அதாவது எதிரணி தலைவர்களை கைது செய்வது அவரது திட்டம். அத்துடன் சர்வதேச சதியில் பங்கு எனக்கூறி, தேர்தல் செயலகத்தையும் சுற்றிவளைத்து, மகிந்த தேசப்பிரியவையும் கைது செய்ய திட்டமிட்டார். நள்ளிரவின் பின்னர் தேர்தல் ஆணையாளரை தொடர்பு கொண்டு, முடிவை மாற்றுமாறும் அல்லது இராணுவத்தை கொண்டாவது ஆட்சியை தொடர்வோம். அப்பொழுது நீங்களும் விபரீதங்களை சந்திக்க வேண்டிவரும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இப்பொழுது தேர்தல்கள் ஆணையாளர் ஒரு முடிவுக்கு வந்திருந்தார். அவர், மீண்டும் எதிரணியை தொடர்பு கொண்டுள்ளார். அந்த சமயத்தில் எதிரணிக்கூட்டில் முக்கிய அங்கம் வகித்த தமிழ்தலைவரும் உடனிருந்துள்ளார். கோத்தபாயவின் மிரட்டலை கூறிய ஆணையாளர், நிலைமைகள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளார்.

எதற்கும் அஞ்ச வேண்டியதில்லை என எதிரணி தலைவர்கள் வாக்குறுதியளித்ததுடன், நிலைமைகளை சீர்செய்யும ஆர்வத்துடன் சர்வதேச சமூகம் உள்ள உறுதிப்பாட்டையும் புரிய வைத்தனர்.

உடனடியாகவே, லலித் வீரதுங்கவை தொடர்பு கொண்ட தேர்தல்கள் ஆணையாளர், “அதுதான் உங்களுடனான எனது அழைப்பு. தயவு செய்து இனி அந்த விடயத்தில் தலையிட வேண்டாம். நான் சுதந்திரமாக எனது கடமையை செய்யப் போகிறேன்” என கூறி துண்டித்து விட்டார்.

இதேசமயத்தில், நிலைமைகள் கட்டுப்பாட்டில் இல்லை என்பதை உணர்ந்து கொண்ட மகிந்த ராஜபக்ச, இராணுவ திட்டத்தை நிறைவேற்ற வேண்டாம் என கோத்தாவிடம் கூறியுள்ளார்.இதனையடுத்து, முடிவுகள் அறிவிக்கப்பட முன்னரே மாலைதீவுக்கு அவர் தப்பிச் செனறுள்ளார்.

இந்த நிலையில், இந்த விடயங்களை ஓரளவு பகிரங்கப்படுத்தியுள்ளார் ஜாதிக ஹெல உறுமய பாராளுமன்ற உறுப்பினரும் பொது எதிரணி தொடர்பில் முன்னின்று உழைத்தவர்களுள் ஒருவருமான அத்துரலிய ரத்ன தேரர். இன்று தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் இதனை அம்பலப்படுத்தியுமுள்ளார்.

“எப்படியாவது அதிகாரத்தைத் தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பதில் ஜனாதிபதியை விட மும்முரமாக இருந்த அவரது சகோதரரும் பாதுகாப்பு செயலாளருமாக இருந்த கோத்தபாய ராஜபக்ச இராணுவ பலத்தைப் பிரயோகித்து ஆட்சியில் நீடிக்க முயற்சி மேற்கொண்டார். தேர்தல் ஆணையாளருக்கு அந்த விடயங்கள் தெரியும், அவர் அதன் விபரங்களை வெளியிடவேண்டும்” என்றார்.

இதேவேளை, முன்னணி வைத்தியசாலையான லங்கா ஹொஸ்பிடல்ஸ் நிறுவனத்தின் தலைமைப் பதவியிலிருந்து கோத்தபாய இன்று விலகிக்கொள்வதாக அறிவித்து தனது இராஜினாமா கடிதத்தை ஒப்படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts