“தமிழர் தாயகப்பகுதியில் நிலை கொண்டுள்ள இராணுவத்தினரை அம்பாந்தோட்டையில் கொண்டு போய்விடுங்கள் ஜனாதிபதிக்காவது பாதுகாப்பாக இருக்கட்டும்” என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ்பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
1990 ஆம் ஆண்டு போரின் காரணமாக இடம்பெயர்ந்து நலன்புரி முகாம்களில் வாழும் வலி.வடக்கு மக்களுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குமான கலந்துரையாடல் மருதனார்மடத்தில் உள்ள விவசாய பயிற்சிக் கல்லூரியில் நேற்று நடைபெற்றது.
அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
1990 ஆம் ஆண்டு போர் காரணமாக இடம்பெயர்ந்து கடந்த 25 ஆண்டுகளாக நலன்புரி முகாம்களிலும் உறவினர், நண்பர்கள் மற்றும் வாடகை வீடுகளிலும் வலி.வடக்கு மக்கள் பல்வேறு துன்பங்களை அனுபவித்து வாழ்ந்து வருகின்றனர்.
தங்களது சொந்த நிலங்களுக்கு செல்வதற்கான உரிமை இருக்கின்றது. எனினும் அதனை இராணுவத்தின் ஊடாக இந்த அரசு தடை செய்து வருகின்றது.
போர் முடிவுற்ற பின்னரும் சொந்த இடங்களில் மீள்குடியமர எமது மக்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
இதற்காக பல போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. எனினும் அதற்கு இந்த மகிந்த அரசு அசைவதாக தெரியவில்லை. அத்துடன் போராட்டத்திற்கு வந்தவர்கள் இராணுவ புலனாய்வாளர்களால் பல்வேறு வழிகளில் அச்சுறுத்தப்பட்டனர்.
நாங்கள் இராணுவ ஆக்கிரமிப்புக்குள் தான் இருக்கின்றோம் என்பதற்கு இவ்வாறான சாட்சிகள் முக்கியமானவையாக அமைகின்றது.
10 இலட்சம் மக்கள் வாழும் வடக்கு மாகாணத்தில் ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் இராணுவம் உள்ளது. ஆகவே 6 பேருக்கு ஒரு இராணுவம்.
ஆனால் இலங்கையில் இரண்டு இலட்சம் இராணுவத்தினரே உள்ளனர் என புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. அவற்றில் வடக்கில் ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் இராணுவமும் கிழக்கில் 20ஆயிரமும் ஏனைய மாகாணங்களில் 30 ஆயிரம் இராணுவமுமே உள்ளனர்.
2 கோடி மக்கள் இருக்கக் கூடிய தென்பகுதியில் 30 ஆயிரம் இராணுவம் எனினும் ஏன் வடக்கில் இந்த அதிகரிப்பு?
இவ்வாறான நிலையில் முகாம் அமைப்பதற்கும் விடுதிகள் ,விளையாட்டு திடல்கள், வியாபார நிலையங்கள் , விவசாயம் போன்றவற்றிற்கு இராணுவத்திற்கு காணி தேவைப்படுகின்றது.
இதற்காக வேறொருவருடைய காணியைப் பறித்து இன்னுமொருவருக்கு கொடுக்க நினைக்கிறது அரசு. இவ்வாறான கேவலமான விடயம் இலங்கையில் மட்டும் தான் நடைபெற்று வருகின்றது.
இந்த செயற்பாட்டிற்கு எமது மக்களும் சிலர் துணைபோகின்றனர்.பணத்திற்கு ஆசைப்பட்டு பாதுபாப்பு படைக்கு காணியை விற்கின்றனர் இதனால் எமது இலக்கிற்கான போராட்டம் பலவீனப்பட்டு விடும்.
இருப்பினும் சொந்த இடங்களுக்கே நாம் செல்ல வேண்டும் என்ற ஒரே கருத்து மக்களாகிய உங்களிடம் வரவேண்டும்.
வடக்கு ,கிழக்கில் புலிகளினாலோ அல்லது பொதுமக்களினாலோ எவ்விதமான பிரச்சினைகளுமில்லை. இராணுவமே குழப்பங்களுக்கு காரணமாக உள்ளது.
அவ்வாறான நிலையில் இராணுவம் இங்கிருக்க வேண்டிய அவசியமில்லை. அம்பாந்தோட்டையில் கொண்டுபோய் விடுவித்தால் ஜனாதிபதிக்காவது பாதுகாப்பாக இருப்பார்கள்.
அத்துடன் இன்று இல்லாத புலிகளை உருவாக்க அரசு முனைகின்றது. இவ்வாறு கூறியே சிங்கள மக்களிடம் வாக்குகளை பெற்றுக்கொள்கின்றனர்.
எமது சொந்த இடங்களில் மீள்குடியமர்த்தினால் மட்டுமே நாம் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்போம் என பரப்புரைக்கு வருபவர்களிடம் மக்களாகிய நீங்கள் கோருங்கள். அவர்களது பதில் எவ்வாறு அமைகின்றது என பார்ப்போம்.
எனவே ஆட்சிக்கு எவர் வந்தாலும் நாம் எமது கொள்கையில் இருந்து பின்வாங்காது ஏனைய சமூகத்தினர் பொல நாமும் வாழ்வதற்கான இலக்குகளை எட்டும்வரை போராடுவோம் என அவர் மேலும் தெரிவித்தார்.
– See more at: http://www.onlineuthayan.com/News_More.php?id=365923704806179637#sthash.4mr0nCGv.dpuf