Ad Widget

ஆட்கடத்தலுடன் புலிகளுக்கு தொடர்பு?

இந்தியாவில் இருந்து அவுஸ்திரேலியா நோக்கி இடம்பெறும் சட்டவிரோத ஆட்கடத்தல் சம்பவங்களுடன் புலிகள் இயக்கத்தினருக்கோ, அல்லது புலி ஆதரவு அரசியல்வாதிகளுக்கோ தொடர்பிருக்கலாம் என, தமிழக க்யூ பிரிவு பொலிஸார் சந்தேகம் அடைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அத்துடன், கள்ளத் தோணி இயக்கும் கடத்தல்காரர்கள் பிடிபடும் போது, படகை விட்டு தப்பி விடுகின்றதுடன் நடுக்கடலில் தத்தளிப்போர், தங்கள் ஆவணங்களை கிழித்து கடலில் போட்டு விடுவதால், அவர்களின் அடையாளம் கூட தெரியாமல் பலியாகின்றனர் என்றும் கியூ பிரிவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, பணம் சம்பாதிக்கும் நோக்கில், கள்ளத் தோணியில் அவுஸ்திரேலியா வரும் இலங்கை தமிழர்கள், நடுக்கடலில் கொத்து கொத்தாக பலியாகின்றனர் என, சென்னையில் உள்ள அவுஸ்திரேலிய தூதரகம் எச்சரித்துள்ளது.

இலங்கை தமிழர்கள் பலர், தமிழக முகாம்களில் இருந்து தப்பித்து, கடல் வழியாக கள்ளத் தோணியில், அவுஸ்திரேலியா செல்லும் சம்பவங்கள், பல ஆண்டுகளாக நடந்து வருகின்றன. இதுகுறித்து, ‘க்யூ’ பிரிவு பொலிஸார் பல வழக்குகள் பதிவு செய்து, படகுகளை இயக்குவோரை கைது செய்கின்றனர்.

கரூர் மாவட்ட முகாமில் இருந்து வெளியேறி, நியூசிலாந்துக்கு கடல் வழியாக செல்ல திட்டமிட்டு, திருச்சியில் கூடிய ஆறு பேரை, ‘க்யூ’ பிரிவு பொலிஸார் கைது செய்தனர். இதில், ஜெயராஜ் என்பவர், இலங்கை தமிழர்களை நியூசிலாந்தில் கொண்டு போய் சேர்க்க, படகு கட்டணமாக, தலா, ஒரு இலட்சம் இந்திய ரூபாய் வசூலித்தது தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து, சென்னையில் உள்ள தென் மாநிலங்களுக்கான அவுஸ்திரேலிய துணை தூதர் சியன் கெல்லி, நேற்று வெள்ளிக்கிழமை இந்திய ஊடகத்துக்கு கருத்து தெரிவிக்கையில்,

‘திருச்சியில், சில இலங்கை தமிழர்களை, ‘க்யூ’ பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர். கைதானவர்கள் கடல் வழியே நியூசிலாந்துக்கு செல்ல முயன்றதாக தெரிவித்துள்ளனர்; அதில் உண்மையில்லை. அவர்கள் அவுஸ்திரேலியா செல்லவே முயற்சித்துள்ளனர்.

அவுஸ்திரேலியாவை தாண்டிய பிறகே, நியூசிலாந்து செல்ல முடியும். அவுஸ்திரேலியாவில் இருந்து, 4,000 கிலோமீற்றர் தூரத்தில் நியூசிலாந்து உள்ளது. இலங்கை தமிழர்கள் என்ற பெயரில், அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக கடல் வழியே வரும் சம்பவங்கள், பல ஆண்டுகளாக தொடர்கின்றன.

படகு ஓட்ட தெரிந்த சில கடத்தல்காரர்கள், தமிழக முகாம்களில் உள்ள இலங்கை தமிழர்களை, அவுஸ்திரேலியாவுக்கு படகில் அழைத்து செல்வதாக கூறி, இலட்சக்கணக்கில் பணம் பெறுகின்றனர்.

கள்ளத் தோணியில் வருவோரை, அவுஸ்திரேலியாவுக்கு அருகிலுள்ள கிறிஸ்துமஸ் தீவில் விட்டு விட்டு, கடத்தல்காரர்கள் தப்பி விடுகின்றனர். இந்த தீவுக்கும், அவுஸ்திரேலியாவுக்கும் இடையே, 1,000 கிலோமீற்றர் தூரம் உள்ளது.

அந்த ஆழமான கடலில், அவர்களால், ஒரு அங்குலம் கூட நீந்தி வர முடியாது. அதனால், தீவில் அடைக்கலம் புகுந்தவர்கள் கடலில் நீந்த முயற்சித்து, கொத்து கொத்தாக பலியாகின்றனர். 2009 முதல், 2013 வரை, 1,200 பேர் கடலில் மூழ்கி இறந்துள்ளனர்.

இந்த விவரம் தெரியாமல், இன்னும் கடல் வழியே சட்டவிரோதமாக வரும் சம்பவங்கள் நடக்கின்றன.
அவுஸ்திரேலியாவுக்குள் சட்ட விரோதமாக யாரும் நுழைய முடியாது. ஏற்கெனவே, ஐ.நா., மூலம் அகதிகளாக, 30 ஆயிரம் பேருக்கு அடைக்கலம் தரப்பட்டது. தற்போது, இலங்கை, இந்தோனேஷியா உள்ளிட்ட நாடுகள் வழியே, அவுஸ்திரேலியாவுக்கு கடல் மார்க்கமாக, இலங்கை தமிழர்கள் வருவதில்லை.

இந்தியாவில் இருந்து மட்டும் வர முயற்சிக்கின்றனர். இதுகுறித்து, இரு நாட்டு பிரதமர்கள் வழியாகவும், வெளிவிவகார அமைச்சு வழியாகவும் பேச்சு நடத்தப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக வரும் யாரையும் நாங்கள் ஏற்க மாட்டோம். எனவே, நியூசிலாந்து செல்வதாகக் கூறி, வழியில் அவுஸ்திரேலியாவில் இறங்கலாம் என, நினைக்க வேண்டாம்.

கிறிஸ்துமஸ் தீவை தாண்டி எந்த படகும் நுழைய முடியாத வகையில், எங்கள் பாதுகாப்பு படையினர் பணியில் உள்ளனர். தமிழக அரசு, இலங்கை தமிழர்களுக்கு, முகாம் அமைத்து தங்க வைத்துள்ளது. அனைத்து வசதிகளையும் இரக்க குணத்துடன் வழங்குகிறது. இதை விட்டு வெளியேறி, சட்டவிரோத பயணம் மூலம் நடுக்கடலில் பலியாக முயற்சிக்க வேண்டாம்’ என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Posts