பெண் மாணவர்கள்,
கலைப்பீடம்,
யாழ் பல்கலைக்கழகம்.
11.03.2016
தலைவர்,
கலைப்பீட மாணவர் ஒன்றியம்,
யாழ் பல்கலைக்கழகம்.
கண்டன அறிக்கை
கடந்த வாரம் (03. 03.2016 ) இடம்பெற்றதாகக் கூறப்படும் கலைப்பீட மாணவர் ஒன்றியக் கூட்டத்தில் ஏற்கனவே கலைப்பீட பீடாதிபதியினால் கொண்டு வரப்பட்டு பின்னர் மீளப்பெறப்பட்ட ஆடைக்கட்டுப்பாடு தொடர்பான சுற்று நிருபத்தினைப் பின்பற்றப்படுவதற்குத் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இம் முடிவு யாரால் எடுக்கப்பட்டது? கலைப்பீட மாணவர் ஒன்றியம் எனின் அதன் உறுப்பினர்கள் யாவர்? பெண் உறுப்பினர்கள் எத்தனை பேர்? பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் பல்கலைக்கழக நிர்வாகத்தினால் வாபஸ் பெறப்பட்டதொரு சுற்று நிருபத்தினை மீள் நடைமுறைப்படுத்துவதற்கான அவசியம் என்ன? அன்றைய கூட்டம் தொடர்பில் பகிரங்கமான அறிவித்தல்கள் விடப்படாமைக்கான காரணம் என்ன? பொதுக் கூட்டமொன்று நடத்தப்படுகின்றபோது குறைந்தது 3 நாட்களுக்கு முன்னராவது அது தொடர்பாக அறிவித்தல் வழங்கப்படுவதே சாதாரணமாக எல்லா பொது அமைப்புக்களினதும் நடைமுறை, அவ்வாறானதொரு நடைமுறை உயர் கல்வி நிறுவனமொன்றின் மாணவர் ஒன்றியத்திற்கு இல்லாது போனமைக்கான காரணம் யாது? முதல்நாள் முடிவெடுத்து அடுத்தநாள் கூடுமளவிற்கு நாட்டின் மிகப்பெரும் பிரச்சினையாக இது கருதப்படுகிறதா? இம் முடிவினை எடுப்பதில் கலைப்பீடத்தின் அதிகார மட்டங்களிலிருந்து அழுத்தங்கள் வழங்கப்பட்டனவா? ஒன்றியக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது பல மாணவர்கள் விரிவுரைகளில் இருந்துள்ளனர். அவ்வாறெனின் கூட்டம் தொடர்பாக குறித்த விரிவுரையாளர்களுக்கு அறிவிக்கப்படவில்லையா?
மாணவர் ஒன்றியம் என்பதன் உண்மையான பொருள்கோடல்தான் என்ன? மாணவர் பிரதிநிதிகள் தன்னிச்சையாக முடிவெடுக்கும் அதிகாரம் கொண்டவர்களா ? அவ்வாறெனின் பிரதிநிதித்துவம் என்பதன் பொருள் சர்வாதிகாரம் என்பதா? பெரும்பான்மை மாணவர் எதிர்க்கும் விடயமொன்றினை ஒன்றியம் எவ்வாறு திணிக்க முயற்சிக்கலாம் ?
தொழில் சார்ந்த உடையாக சேலை அறிமுகப்படுத்தப்பட்டது எப்போது ? கலைப்பீடத்தில் பயிலும் அனைவரும் சேலை அணியும் தொழிலுக்கு மட்டும்தான் பொருத்தமானவர்கள் என்று ஒன்றியம் கருதுகின்றதா? ஏனைய பல்கலைக்கழகங்களில் விரிவுரையாளர்கள் சேலை தவிர்ந்த ஏனைய வசதியான உடைகளில் விரிவுரைகள் நடத்துவது தொடர்பில் ஒன்றியம் அறிந்துள்ளதா? ஏனைய பல்கலைக்கழகங்களில் கற்கும் மாணவர்களுக்கு தொழில் தகுதி இல்லையா?
அன்றைய கூட்டத்தில் “சேலை அணிந்தால் மதிப்போம் இல்லையேல் மிதிப்போம்”, “சேலை அணியாதவர்கள் குடும்ப வாழ்க்கையில் ஈடுபடுவதற்கு தகுதியற்றவர்கள், ஒழுக்கக்கேடானவர்கள்” போன்ற வார்த்தைப் பிரயோகங்கள் பயன்படுத்தப்பட்டமைக்கு கூறப்படும் நியாயப்பாடுகள் எவை? கலைப்பீடத்தில் பயிலும் பெண்களுக்கு வரன் தேடும் பணியினை மாணவர் ஒன்றியம் ஏற்றுக்கொண்டுள்ளதா? சாதாரணமாக ஆணும் பெண்ணும் இணைந்து வாழ்வதற்கு உடலியல் முதிர்ச்சி மற்றும் உளவியல் முதிர்ச்சி போதுமானதாகக் கருதப்படுகிறது, அவ்வாறெனின் யார் குடும்ப வாழ்க்கை நடத்துவதற்கு தகுதியானவர் என்பது தொடர்பில் கலைப்பீட ஒன்றியத்தைச் சேர்ந்த வைத்தியர்களால் பரிசோதனை நடத்தப்படுகின்றதா? சேலை வாங்கப் பணம் இல்லாத மாணவர்களுக்கு சேலை வாங்கிக் கொடுப்பதாக வாக்களிக்கப்பட்டுள்ளது அவ்வாறெனின் சேலை வியாபார நிறுவனங்களுடன் வியாபார உடன்படிக்கை எவற்றையும் மாணவர் ஒன்றியம் செய்துள்ளதா? பல்கலைக்கழகத்தில் கற்கும் எத்தனையோ மாணவர்வர்கள் பொருளாதார இடர்பாடுகளோடு கல்வியை தொடர்வதா, இடை நிறுத்துவதா என்ற போராட்டத்தோடு தினம் தினம் பல்கலைக்கழகத்திற்கு வந்து போகின்றனர். இது தவிர பெண் மாணவர்கள் விடுதி தொடர்பான பிரச்சினைகள் நிலவுகின்றன. இவை தொடர்பில் கவனம் எடுக்காத மாணவர் ஒன்றியத்திற்கு பெண் மாணவர்களுக்கு சேலை வாங்கிக் கொடுப்பதில் அத்தனை அக்கறை ஏன் ஏற்பட்டது? இந்தக் கேள்விகளுக்கு மாணவர் ஒன்றியத்திடம் பதில்கள் உள்ளனவா?
மாணவர் ஒன்றியத்திற்கு அறியத்தருவது யாதெனின், அன்றைய ஒன்றியக் கூட்டத்தில் பயன்படுத்தப்பட்ட தவறான வார்த்தைகளை யார் பயன்படுத்தியிருப்பினும் அன்றைய கூட்டத்திற்குத் தலைமையேற்றவர் இதற்குப் பொறுப்புச் சொல்லியே ஆகவேண்டும் என்பதோடு இவ்விடயம் தொடர்பில் கலைப்பீடத்தினைச் சேர்ந்த அனைத்து பெண் மாணவர்களும் இதனை வன்மையாகக் கண்டிப்பதோடு ஒன்றியத்தால் முடிவு செய்யப்பட்டதாகக் கூறப்படும் ஆடைக்கட்டுப்பாடு தொடர்பான சுற்று நிருபத்தினை முற்றாக நிராகரிக்கின்றோம்.
குறிப்பு – மேற்படி கண்டன அறிக்கை 11.03.2016 தயாரிக்கப்பட்ட இவ்வறிக்கை வெளியிடப்படுவதற்கு முன்னராக தனிப்பட்ட சில மாணவர்களுக்கு தொலைபேசி அழைப்புக்களினூடாக தொந்தரவு செய்யும் முயற்சிகள் இடம்பெற்றுள்ளன. இவ்விடயம் தொடர்பில் தனிப்பட்ட வகையில் தொந்தரவு நிகழ்ந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதோடு பொருத்தமான முறையில் அடுத்த கூட்டம் நடைபெற்று உரியவர்கள் மன்னிப்புக் கேட்கத் தவறின் இனி கலைப்பீட மாணவர் ஒன்றியத்தால் எடுக்கப்படப்போகும் எந்தவொரு முடிவிற்கும் பெண் மாணவர்கள் ஆதரவு வழங்கப்போவதில்லை.
நன்றி
இங்ஙனம்,
பெண் மாணவர்கள்
இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.