ஆசிரியர் வெற்றிடங்களை வருட இறுதிக்குள் நிரப்ப நடவடிக்கை!

நாடளாவிய ரீதியிலுள்ள அரச பாடசாலைகளில் நிலவும் சகல ஆசிரியர் வெற்றிடங்களையும் இவ்வருட முடிவிற்குள் நிரப்புவதற்கான வேலைத்திட்டமொன்றை கல்வி அமைச்சு விடுத்துள்ளதாக அமைச்சின் செயலாளர் உபாலி மாரசிங்ஹ தெரிவித்துள்ளார்.

கிராமப்புற கஷ்டப் பிரதேச பாடசாலைகளிலேயே அதிகளவான ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுவதாகவும், குறிப்பாக தகவல் தொழில்நுட்பம், கணிதம், விஞ்ஞானம், பௌதீகவியல், தொழில்நுட்பவியல், பாடங்களுக்கு கூடுதலான வெற்றிடங்கள் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக விண்ணப்பங்கள் கோரப்படும் போது வெற்றிடங்கள் உள்ள பாடசாலையை குறிப்பிட்டு விண்ணப்பம் கோரப்படுமெனவும், தெரிவு செய்யப்படும் ஆசிரியர்கள் குறித்த பாடசாலையில் ஐந்து வருடம் கடமையாற்றும் வகையில் கல்வியமைச்சுடன் ஒப்பந்தம் ஒன்று செய்து கொள்ள வேண்டுமெனவும் அவர் தெரிவித்தார்.

இவ் ஐந்து வருட காலப்பகுதிக்குள் இடமாற்றம் பெறவோ, வௌிநாட்டு வேலைவாய்ப்பிற்கோ, செல்ல முடியாதெனவும் அவ்வாறு செல்ல முயற்சித்தால் நியமனங்கள் இரத்துச் செய்யப்படலாம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts