ஆசிரியர் பற்றாக்குறையால் மாணவர்கள் இடைவிலகல் அதிகரிப்பு

கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள பாடசாலைகளின் இடைநிலை வகுப்புக்களின் முக்கிய பாடங்களான கணிதம், விஞ்ஞானம் ஆகிய பாடங்களுக்கு தொடர்ந்தும் ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவிவருவதால், பாடசாலைகளிலிருந்து மாணவர்கள் இடைவிலகுவது அதிகரித்து வருவதாக, முன்னாள் வலயக் கல்விப் பணிப்பாளரும் வடமாகாண சபை உறுப்பினருமான பசுபதி அரியரட்ணம் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கும் போது,

‘நான் வலயக் கல்விப் பணிப்பாளராக இருந்த காலத்தில் இருந்தே கணித, விஞ்ஞான பாடங்களுக்கு ஆசிரியர்கள் பற்றாக்குறை காணப்படுகின்றது. அது இன்றும் தொடர்கின்றது. பாடசாலைகளில் முக்கிய பாடங்களுக்கு ஆசிரியர்கள் இல்லையென்றால், பாடசாலை செல்வதற்கு மாணவர்கள் விரும்புவதில்லை. பாடசாலைகளில் ஒழுங்கான கற்பித்தல் நடைபெறும்போது, பாடசாலைக்குச் செல்வதற்கு மாணவர்களுக்கு விரும்பம் ஏற்படும்’ என்று தெரிவித்தார்.

‘பாடசாலைகளில் குறைபாடுகளை வைத்துக்கொண்டு மாணவர்களின் இடைவிலகலைப் பற்றிக் கதைப்பதில் அர்த்தமில்லை. பாடசாலைகளின் குறைபாடுகள் தீர்க்கப்பட வேண்டும். போர் நடைபெற்ற காலங்களில் குறைபாடுகளைக் கதைத்தோம். தற்போது போக்குவரத்து வசதிகள் ஏற்பட்டுள்ளன. பாடசாலைகளில் கட்டட வளங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

சில பாடசாலைகளில் அளவுக்கதிகமான ஆசிரியர்கள் இருக்கின்றனர். நகரப் பாடசாலைகளில் கடமைப் புரியும் ஆசிரியர்கள் கிராமப் புற பாடசாலைகளுக்குச் செல்லும் போதுதான் மாவட்டத்தின் கல்வி வளர்ச்சியடையும். இதேவேளை ஆசிரியர்களுக்கு பாடசாலைக்குச் செல்வதற்குரிய போக்குவரத்து வசதியை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டியது அதிகாரிகளின் பொறுப்பு’ என்றும் அவர் குறிப்பிட்டார்.

Related Posts