யாழ்.கல்வி வலய ஆசிரியர்களை இடமாற்ற சபைக்குத் தெரியாமல் இடமாற்றம் செய்யப்படுவதாக இலங்கை ஆசிரியர் சங்கப் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்ராலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
வடமாகாண ஆளுநரின் ஏற்பாட்டில் இலங்கை ஆசிரியர் சங்கம், தமிழர் ஆசிரியர் சங்கம் மற்றும் வலயக் கல்விப் பணிப்பாளர்களை உள்ளடக்கியதாக ‘ஆசிரியர் இடமாற்ற சபை’ என்னும் அமைப்பு ஒவ்வொரு கல்வி வலயங்களிலும் ஆசிரியர் இடமாற்றம் தொடர்பான தீர்மானத்தினை எடுத்து வருகின்றது.
இந்த அமைப்பானது, வடமாகாணத்தில் அமைந்திருக்கும் 12 கல்வி வலயங்களிலும் இயங்கி வருகின்றது.
மேற்படி ஆசிரியர் இடமாற்ற சபையானது யாழ்.கல்வி வலயத்திலும் இருக்கின்றபோதும், யாழ்.கல்வி வலயத்திற்குட்பட்ட ஆசிரியர்களின் இடமாற்றமானது இடமாற்ற சபைக்குத் தெரியாமலும், முறைகேடான விதத்திலும் கல்வி வலயத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இது தொடர்பாக வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி, வடமாகாண கல்விப் பணிப்பாளர் வ.செல்வராசா, கல்வி அமைச்சின் செயலாளர் சி.சத்தியசீலன் ஆகியோருக்கு இலங்கை ஆசிரியர் சங்கத்தினால் தெரியப்படுத்தப்பட்டுள்ளதென தெரிவித்தார்.
வடமாகாண சபைத் தேர்தல் முடிவடைந்தும், முறையான மாகாண சபை நிர்வாகமானது இன்னமும் உருவாக்கப்படாத நிலையில் இடமாற்ற சபைக்கு தெரியாமல் அவசர அவசரமாக தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த இடமாற்றமானது அரசியல் காரணங்களுக்காக இருக்கும் என்ற சந்தேகத்தை எழுப்புவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.