ஆசிரியர் இடமாற்றங்கள் சாவுக்கு வழிகோலக்கூடாது.

ஒரே பாடசாலையில் ஏழு வருடங்கள் கடமையாற்றிய ஆசிரியர்களுக்கு அவர்களது நியாயமான காரணங்களைக் கருத்தில் எடுக்காது இடமாற்றம் என்னும் பெயரில் வடக்கு மாகாணத்தில் நடைமுறைப்படுத்தப்படும் இடமாற்றங்களால் ஆசிரியர்கள் சாவடைவதும், ஓய்வுபெற வேண்டிய நிலைக்கும் தள்ளப்படவும் நேர்கிறது என்று இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் தமிழர் வெளியிட்டுள்ளது.

இது தொடர்பில் சங்கம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

ஏழு வருடங்கள் ஒரே பாடசாலையில் கடமையாற்றிய ஆசிரியர்களுக்கு இடமாற்றம் வழங்க வேண்டுமென்று சுற்றுநிருபத்தில் எங்கும் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை. ஆனாலும் ஏனைய ஆசிரியர்களுக்கும் வாய்ப்பளிக்கும் விதத்தில் ஆசிரிய இடமாற்றங்கள் நடைபெற வேண்டும் என்ற நியதிக்கு அமைய இடமாற்றங்கள் இடம்பெறுகின்றன.

அண்மையில் நடைபெற்ற இத்தகைய இடமாற்றத்தின் மூலம் வயது முதிர்ந்த பெண் ஆசிரியருக்கு நகரப் பாடசாலை ஒன்றில் இருந்து மற்றொரு நகர்ப்புறப் பாடசாலைக்கு இடமாற்றம் வழங்கப்பட்டது. அந்த ஆசிரியருக்கு இருதய சத்திர சிகிச்சை நடைபெற்றுச் சில மாதங்களும் ஆகாத நிலையில் வழங்கப்பட்ட இடமாற்றத்தை இரத்துச் செய்யுமாறு மேன் முறையீடு செய்து செல்லக்கூடிய இடங்களுக்கெல்லாம் சென்று முடியாத நிலையில் மனமுடைந்து மேலும் நோய்வாய்ப்பட்டு இட மாற்றப்பட்ட பாடசாலையில் கடமையைப் பொறுப்பேற்று தற்போது மரணமடைந்துள்ளார். இவரது மரணத்துக்கான முழுக் காரணமும் அந்த ஆசிரியரின் மனதில் இடமாற்றம் காரணமாக ஏற்பட்ட விரக்தியே என்று சங்கம் குறிப்பிடுகின்றது.

குறித்த ஆசிரியரின் சத்திர சிகிச்சையைக் கருத்தில் கொண்டு இடமாற்றம் செய்யவேண்டாம் என்று நாம் முன்வைத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது மட்டுமன்றி இன்னும் ஒரு வருடத்தில் தான் ஒய்வு பெறுவதாக அவ்வாசிரியர் கூறியதையும் கருத்தில் எடுக்காமல் இடமாற்றம் வழங்கியதால் இப்போது குறித்த ஆசிரியரின் மரணம் நிகழ்ந்துள்ளது. இதேபோன்று வயது முதிர்ந்த கடும் சுகவீனமான இன்னும் இரண்டு ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு அவர்கள் மனமுடைந்து குறித்த வயதுக்கு முன்னரே இளைப்பாறியுள்ளனர்.

இது இவ்வாறிருக்க உயர் செல்வாக்குகளைப் பயன்படுத்தி இடமாற்றமும் இல்லாமல் விசேட பதவியுயர்வுகளோடு பலர் ஒரே பாடசாலையில் பல ஆண்டுகளாகக் கடமையாற்றுவதனையாரும் கண்டுகொள்வதில்லை. இத்தகைய நடைமுறைகளுக்கு வடக்கு மாகாணகல்வி அமைச்சின் செயலாளர் சரியான தீர்வைக் காணத் தவறினால் ஆசிரியர்களுக்கு மன அழுத்தங்கள் எற்படுவதோடு பிள்ளைகளின் கல்வியில் பாதிப்பு ஏற்படுவதோடு ஆசிரியர்கள் இளைப் பாறுதலும், மரணமாவதும் சாதாரணமாகிவிடும் என்றுள்ளது.

Related Posts