வன்னி ஆசிரியர்கள் 94 பேர் ஆசிரியர் இடமாற்றம் வழங்க கோரி இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு செய்துள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ் தெரிவித்தார்.
2005ஆம் ஆண்டுக்கு முன்னரான காலப்பகுதியில் யாழ். மாவட்டத்தில் இருந்து ஆசிரியர் இடமாற்றம் பெற்றுச் சென்றவர்கள், மீண்டும் யாழ். மாவட்டத்தில் தங்களுக்கு நியமனம் வழங்குமாறு கோரிக்கை விடுத்தும் இதுவரை காலமும் நியமனம் வழங்கப்படவில்லை என அவர்கள் தங்களது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளனர்.
7 வருடங்களுக்கு மேலாக கஷ்டப் பிரதேசத்தில் கடமையாற்றிய தமக்கு வசதியான பிரதேசத்தில் கடமையாற்றுவதற்க்கான இடமாற்றம் வழங்குவதற்கு ஆவணம் செய்யுமாறு கோரி முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.
மாகாண கல்வி அமைச்சிற்கு ஆசிரியர் இடமாற்றங்கள் குறித்த பல்வேறு முறைப்பாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் பதிவு செய்யப்பட்டுள்ளதால், இம்முறைப்பாட்டினை விசாரணை மேற்கொள்வதற்கு சிறிது காலம் தாமதிக்கப்படுமென்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் மேலும் கூறினார்.