மாணவர்களின் நலனில் அக்கறையுடன் செயற்படும் ஆசிரியர்களின் வசதிகள் மற்றும் சலுகைகள் அதிகரிக்கப்படுமே தவிர குறைக்கப்படாது என கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
பாடசாலை விடுமுறை காலத்தில் ஆசிரியர்களின் சம்பளத்தை நிறுவத்துவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
இந்தநிலையில் இதுதொடர்பில் நேற்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்டுள்ள விசேட அறிக்கை ஒன்றிலேயே கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பாடசாலை விடுமுறைக்காலத்தில் ஆசிரியர்களின் சம்பளத்தை நிறுவத்துவதற்கு கல்வி அமைச்சு ஆயத்தமாவதாக வெளியான போலி செய்தி தொடர்பில் சட்டநடவடிக்கை எடுக்கவுள்ளோம்.
மாணவர்களுக்காக தீயாகங்களை செய்யும் ஆசிரியர்களின் வசதிகள் மற்றும் சலுகைகள் அதிகரிக்கப்படுமே தவிர குறைப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படாது.
தற்போதைய அரசாங்கத்தால் ஆசிரியர்கள் உள்ளிட்ட அரசாங்க பணியாளர்களது சம்பளம் 10 ஆயிரம் ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதோடு, அதிபர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவு 750 ரூபாவில் இருந்து 7 ஆயிரத்து 500 ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதனுடன் பரீட்சை பணிகளில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் மற்றும் அதிபார்களின் கொடுப்பனவுகளையும் அதிகரிப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு, பரீட்சைகள் ஆணையாளருக்கு ஆலோசனை வழங்கியுள்ளளேன்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.