யாழ்ப்பாணத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள ”ஆவா கெங்ஸ்டர்” உறுப்பினர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பாடசாலை மாணவனும், ஆசிரியரும் அந்த குழுவைச் சேர்ந்தவர்கள் அல்லர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எனினும் ஆவா குழுவினர் என்ற சந்தேகத்தின் பேரில் இரு வாள்களுடன் கைதுசெய்யப்பட்ட இருவரும் நேற்று யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு நவம்பர் 2 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் பலியாகியமை மற்றும் அந்த சம்பவத்தை அடுத்து தேசிய புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் இருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டமையை தொடர்ந்து யாழ் குடா நாட்டில் ஆவா கும்பலைத் தேடி பொலிஸார் தமது சோதனைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.
இதற்கமைய நேற்று முன்தினம் யாழ் நகரிலுள்ள ஒழுங்கையொன்றில் வைத்து இரண்டு வாள்களுடன் இருவர் பொலிசாரால் கைதுசெய்யப்பட்டனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் கடந்த ஓகஸ்ட் மாதம் நடைபெற்ற உயர்தரப் பரீட்சையில் நடனக்கலைப் பாடத்தின் செயன்முறைப் பரீட்சைக்குத் தோற்றியிருந்தவர் என தெரியவந்துள்ளது.
இந்த சந்தர்ப்பத்தில் குறித்த மாணவன் செயன்முறைப் பரீட்சைக்காக உண்மையான வாள் ஒன்றைப் பயன்படுத்தியிருந்ததாகவும், செயன்முறைக்குப் பயன்படுத்திய வாள் அதன் உரிமையாளரிடம் மீளக் கையளிப்பதற்காக தனது நடனக்கலை ஆசிரியருடன் சென்றுகொண்டிருந்த போதே ஆவா குழு என சந்தேகத்தின் பேரில் பொலிஸார் கைது செய்திருந்தனர்.
ஆரம்பத்தில் ஆவா குழுவுடன் தொடர்புகளைப் பேணியவர்கள் என்ற சந்தேகத்தில் பொலிஸார் விசாரணைகளை நடத்திவந்திருந்தனர். எனினும் விசாரணைகளில் இருந்து குறித்த இருவரும், அந்தக் குழுவுடன் எந்தவித தொடர்பும் வைத்திருக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது.
எவ்வாறாயினும் அவர்கள் தொடர்பில் வழக்கு பதிவுசெய்யப்பட்டதற்கு அமைய நேற்று யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதற்கு அமைய நவம்பர் இரண்டாம் திகதி வரை விளக்கமறியில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, யாழ்ப்பாணத்தில் தற்போது உருவாகியுள்ள ஆவா கெங்ஸ்டர் மற்றும் பிரபாகரன் படை தொடர்பில் பொலிஸ் மா அதிபர் மற்றும் சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரட்ணாயக்க ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு செல்லவுள்ளதாக மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்தார்.