ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் திரு.டக்கேஹிக்கோ நக்கோவோ இன்று காலை ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களை சந்தித்தார்.
இக்கலந்துரையாடலின்போது ஜனாதிபதி ராஜபக்ஷ அவர்கள் திரு. நக்கோவோவுக்கு யுத்தத்தின் பின்னர் இலங்கையில் மேற்கொள்ளப்பட்டுள்ள அபிவிருத்தியைப்பற்றி சுருக்கமாக எடுத்துரைத்தார்.
உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களை மீளக் குடியமர்த்துவதற்கும் முன்னாள் போராளிகளுக்கு புனர்வாழ்வளிப்பதற்கும் எவ்வாறு அரசாங்கம் உடனடியாக செயற்பட்டது என்பதைப்பற்றி ஜனாதிபதி விளக்கினார்.
இந்த யுத்தம் தமிழ் சமூகத்திற்கெதிரானதல்ல, இது பயங்கரவாதிகளுக்கு எதிரான யுத்தம் என ஜனாதிபதி ராஜபக்ஷ கூறினார்.
யுத்தம் முடிவடைந்த பின்னர் உடனடியாக வடமாகாணத்தை அபிவிருத்தி செய்வதற்கு அரசாங்கம் மேற்கொண்ட அபிவிருத்தி கருத்திட்டங்களைப்பற்றி ஜனாதிபதி ராஜபக்ஷ விபரித்தார்.
நீங்கள் சென்று இவ் அபிவிருத்தியை நேரடியாகப் பார்க்க வேண்டும் என ஜனாதிபதி
திரு.நக்கோவோவுக்கு கூறினார்.
இலங்கை 1966ஆம் ஆண்டு ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஸ்தாபக அங்கத்தினராக இணைந்து கொண்டது ஆசிய அபிவிருத்தி வங்கியின் அறிக்கையின் பிரகாரம் கடந்த ஆண்டு இறுதி வரைக்கும் வங்கி மொத்தமாக 6.17 பில்லியன் அமெரிக்க டொலரை கடனாகவும் 358 மில்லியன் டொலரை மானியமாகவும் இலங்கைக்கு வழங்கியுள்ளது.
ஆசிய அபிவிருத்தி வங்கி வலுசக்தி,பாதைகள், நீர் விநியோகமும் துப்புரவேற்பாடும், கல்வி, திறன்விருத்தி, யுத்தத்திற்கு பின்னரான
புனரமைப்பு, நீர் வள முகாமைத்துவம் ஆகிய துறைகளில் இலங்கைக்கு உதவியளிக்கின்றது.
இலங்கையின் சமூக சுட்டிகள் தெற்காசியாவில் மிகச் சிறந்தவையாக இருக்கின்றன என ஆசிய அபிவிருத்தி வங்கி அதன் இணையத்தில் குறிப்பிட்டுள்ளது. இந்த நாடு உலகளாவிய அறிவைப்பெற்றுள்ளது. ஒப்பீட்டு ரீதியாக பார்க்கின்றபோது இதன் வறுமை அளவு குறைந்துள்ளது.
யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் பொருளாதார அபிவிருத்தி ஸ்திர நிலையில் இருந்து வந்துள்ளது.
ஆனால் 2012ஆம் ஆண்டில் மந்தகதியை அடைந்திருந்தது. எவ்வாறாயினும் 2013ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டில் அது வலுவான நிலையில் வளர்ச்சியடைந்துள்ளது.
ஆசிய அபிவிருத்தியின் தெற்காசிய திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் திரு. ஜூவான் மிரண்டா, இலங்கையின் வதிவிட பணிகளுக்கான ஆசிய அபிவிருத்தி வங்கியின் உள்நாட்டு பணிப்பாளர் திருமதி ஸ்ரீ விடோவதி மற்றும் ஏடிபீயின் ஏனைய அதிகாரிகளும் இப்பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டனர்.
இச்சந்திப்பின்போது இணைந்துகொண்ட இலங்கை அதிகாரிகள் வருமாறு:
சர்வதேச நிதிய கூட்டிணைப்பு சிரேஷ்ட அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம, நீர்ப்பாசன, நீர் முகாமைத்துவ அமைச்சர் திரு. நிமல் சிறிபால த சில்வா, நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சர் திரு.தினேஷ் குணவர்தன, பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, மின்வலு, எரிசக்தி அமைச்சர்
திருமதி பவித்ரா வன்னி ஆராச்சி, இளைஞர் விவகார திறன் விருத்தி அமைச்சர் டளஸ் அலகப்பெரும, நிதி திட்டமிடல் அமைச்சின் செயலாளரும் திறைசேரியின் செயலாளருமான கலாநிதி பி.பீ.ஜயசுந்தர, இலங்கை மதிய வங்கி ஆளுநர் திரு.அஜித் நிவாட் கப்ரால் ஆகியோர் ஆவர்.